அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், நாடாளுமன்றத்தை கலைத்தல் மற்றும் அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய நிறைவேற்று பேரவையை கலைக்கவேண்டும் என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம். தேசிய நிறைவேற்று பேரவையின் கட்டளைகள் 100 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதேவேளை, புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்து விட்டமையால் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.