வடக்கில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலையில் நெல்மூட்டைகளுடன் தெருவில் விவசாயிகள் !

20160214_105009_CI
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பல்வேறு நெருக்கடிகள் போராட்டங்கள் சவால்களின் மத்தியில் உற்பத்தி செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். கமநல திணைக்களங்கள் மற்றும் விவசாயத் திணைக்கங்கள் உரிய வகையில் கொள்வனவில் ஈடுபடவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
 
போரினால் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளான விவசாயிகள் கடந்த காலத்தில் இயற்கையின் மாற்றங்களினாலும் பெரும் இழப்புக்களை சந்தித்து நெல்லை அறுவடை செய்துள்ளனர். தமது உற்பத்தியை கொள்வனவு செய்வதில் கமநலத் திணைக்களங்கள் மற்றும் விவசாயத் திணைக்களங்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் விவாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயி ஒருவரால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் குறிப்பிட்டளவு நெல்லையே கொள்வனவு செய்வதாகவும் ஏனைய நெல்லை வைத்து தாம் என்ன செய்வதென்றும் கேள்வி எழுப்புவதுடன் இதனால் தமது தொழில் நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். 
 
உற்பத்தியாகின்ற நெல்லை நெற்களஞ்சியசாலைகளில் பாதுகாப்பதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாட்டை குறைக்க இயலும் என்று தெரிவிக்கும் விவசாயிகள் தனியார் தமது நெல்லை அரை விலையில் கொள்வனவு செய்வதாகவும் இதனால் தாம் எதிர்காலத்தில் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். 
 
இதேவேளை வவுனியாவில் ஓமந்தை, வேப்பங்குளம், கனகராயன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெற்களஞ்சிய சாலைகளில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு சிலரிடம் மாத்திரமே நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் நெல் கொள்வனவில் பாரபட்சம் நிலவுவதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
 
முறையான அறிவித்தல் மற்றும் நடைமுறைகளின்றி சிலரிடம் மாத்திரம் நெல்லை கொள்வனவு செய்வதன் பின்னணி என்ன என்று கேள்விபியுள்ள விவசாயிகள் வவுனியா பூங்காவிற்கு அருகில் உள்ள நெல் களஞ்சியசாலையை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் தாம் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள அதுவும் காரணம் என்கின்றனர். 
 
யானை, பன்றி முதலிய காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்து அறுவடை செய்தால் அவற்றை உரிய வித்தில் கொள்வனவு செய்ய வவுனியா விவசாயத்திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் வவுனியா விவசாயிகள் நெல்லுடன் தெருவில் அலையும் நிலமைக்கு தாம் ஆழாகிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். GTN