அரச புலனாய்வுப் பிரிவினை உடனடியாக செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காவல்துறை மா அதிபர் என்.கே.இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள், பாதாள உலகக்குழு செயற்பாடுகள் போன்றனவற்றை கட்டுப்படுத்த இவ்வாறு அரச புலனாய்வுப் பிரிவின் செயற்பாடு அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த அரச புலனாய்வுப் பிரிவு அலகுகள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக் குழுவினர், போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்களை அரச புலனாய்வு பிரிவினர் வழங்கி வந்ததாகவும், மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த தகவல் வழங்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, மீளவும் அரச புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, இவ்வாறு அரச புலனாய்வுப் பிரிவின் அலகுகளை அனைத்து காவல் நிலையங்களையும் நிறுவ காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.