செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் !

க.கிஷாந்தன்

 

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நீதிமன்றில் 02.03.2016 அன்று புதன்கிழமை முன்னிலையாகியபோது நீதவானின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

DSC04073_Fotor

 

கடந்த 2014ஆம் ஆண்டில் அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை இடைமறித்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் செந்தில் தொண்டமான் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.இவ்வழக்கு மீதான விசாரணை 01.03.2016 அன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

 

இந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் 02.03.2016 அன்றைய தினம் சரணடைந்த செந்தில் தொண்டமான் தாம் மன்றில் இதற்கு முன்னர் முன்னிலையாகாத காரணத்தை விளக்கிக்கூறும் வகையில் தனியார் மருத்துவ அறிக்கை ஒன்றை மன்றில் சமர்பித்தார்.

 

எனினும் இதனை நிராகரித்த நீதவான் பிரசாத் லியனகே, அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவ அறிக்கை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் செந்தில் தொண்டமான் சார்பில் பிரசன்னமாகிய சட்டத்தரணி, நீதிமன்றத்தினால் 01.03.2016 அன்று விடுக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரிக்கை அடங்கிய மனுவை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் பிடியாணை உத்தரவை இரத்து செய்தார்.

 

அத்துடன் சந்தேக நபரான செந்தில் தொண்டமானிற்கு கடும் எச்சரிக்கை வழங்கிய நீதவான், அடுத்த வழக்கு விசாரணையின்போது முன்னிலையாகுமாறும் அறிவுறுத்தினார்.