ஒரு மொழி பேசும் சமூகங்கள் இனியும் பிரிந்து வாழ முடியாது :களுவாஞ்சிக்குடியில் அமைச்சர் றிசாத்

 

சுஐப் எம். காசிம்

ஒரே மொழி பேசும் இரண்டு சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இரண்டு சமூகங்களும் பிரிந்து வாழ முடியாது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

12803131_557616127737770_4625205652543403037_n_Fotor

களுவாஞ்சிக்குடியின் 311 வது லங்கா சதொச விற்பனை நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலே அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி, முன்னாள்  பிரதி அமைச்சரும், பட்டிருப்புத் தொகுதி ஐதேக அமைப்பாளருமான  எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர். 

12801301_557616354404414_4287038572693684268_n_Fotor

அமைச்சர் இங்கு கூறியதாவது

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் நாம் பல்வேறு அழிவுகளை சந்தித்துவிட்டோம். உடமை இழந்தோம், உயிர் இழந்தோம். இருந்த இடங்களை விட்டு அகதிகளாகச் சென்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோரின் தலைமையிலான இந்த அரசு மீண்டும் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் – சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வகையில் சதொச நிறுவனம் எனது அமைச்சின் கீழ் வந்துள்ளது,

கடந்த காலங்களில் ரூபா 15 கோடி அளவில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனத்தை, படிப்படியாக இலாபமீட்டும் நிருவனமாக மாற்றும் வகையில், சுமார் ஒருவருட இடைவெளிக்குள் ரூபா 05 கோடி நஷ்டத்தை குறைத்துள்ளோம். இன்னும் 06 மாதங்களில் முற்றிலும்  இலாபகரமீட்டும் நிறுவனமாக சதொசவை மாற்றியமைக்கும் பணிகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம்.

இந்த மண்ணின் மைந்தரான முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தியின் பகீரத முயற்சியினாலும், பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஒத்துழைப்பினாலும் சதொசவை பொறுப்பேற்ற பின்னர், கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இந்தக் கிளையை திறக்க முடிந்திருக்கின்றது,

இதனைத் தவிர மட்டக்களப்பில் மேலும் 05 நிறுவனங்களும் அம்பாறையில் 10 நிறுவனங்களும் அடங்களாக சுமார் 180 சதொச கிளைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். வெறுமனே சம்பளம் கூட கொடுக்க வழியில்லாத சதொச நிறுவனத்தை, இலாபமீட்டச் செய்து, ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டமும் எம்மிடமுண்டு என்று அமைச்சர் றிசாத் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி கூறியதாவது, இன்று பட்டிருப்புத் தொகுதிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். எதிர்காலத்தில் இந்த தொகுதிக்கு முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி ஊடாக பல்வேறு  பணிகளை நாம் ஆற்ற உள்ளோம். எவர் எதைத்தான் சொன்னாலும், என்னதான் இனவாதம் பேசினாலும் எமது பணிகளை இடை நிறுத்த மாட்டோம் என்றார்,

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி உரையாற்றுகையில், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் பட்டிருப்பு சமூகம் என்றுமே கடமைப்பட்டுள்ளது என்றார்.