கண்டி, தலதா மாளிகை முன்பாக மூடப்பட்டிருக்கும் வீதி திறக்கப்படுவதை அனுமதிக்க முடியாது !

thalatha kandy
கண்டி, தலதா மாளிகை முன்பாக மூடப்பட்டிருக்கும் வீதி திறக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அஸ்கிரிய பீடத்தினர் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அஸ்கிரிய உயர்பீட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கண்டி தலதா மாளிகையின் பாதுகாப்பு கருதி, தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல இந்த வீதியைத் திறந்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். 

எனினும் மகாநாயக்கர்களுடனான அவரது சந்திப்பின் போது தலதா மாளிகை முன்னால் உள்ள வீதியை எந்தக் கட்டத்திலும் திறக்க அனுமதிக்க போவதில்லை என்பதை தெளிவாக வலியுறுத்தியுள்ளோம். 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த வீதியைத் திறந்துவிடுமாறு கோரி ஒரு குழுவினர் தலதா மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். 

இதில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் கண்டி சர்வதேச பாடசாலையொன்றில் மாணவர்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறானவர்களுக்கு பௌத்த மதத்தின் பெறுமதி தெரியாது . 

எதுவாக இருந்தாலும் எந்தவொரு கட்டத்திலும் தலதா மாளிகையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் மூடப்பட்டுள்ள வீதியை திறப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.