சாத்தியப்படுமா அதிகாரப்பகிர்வு ? (பகுதி 2 )

கடந்த பதிவின் தொடர்ச்சி………..

 

சாத்தியப்படுமா அதிகாரப்பகிர்வு ?

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்கள் நினைத்திருந்தால், தமிழீழ கோரிக்கை வலுவடயமுன்பே குறைந்தளவு அதிகாரத்தினையாவது வழங்கியிருக்க முடியும். அன்று தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். தென் பகுதிகளில் இன்று இருப்பதுபோன்று பௌத்த இனவாத கட்சிகளோ, இயக்கங்களோ அன்று இருக்கவில்லை. ஜே.ஆர். ஜயவர்தனவின் பிடிவாதப்போக்கின் காரணமாகவே தமிழ் இளைஞ்சர்கள் மத்தியில் தமிழீழ கோரிக்கை வலுவடைந்ததும், இந்நாடு இவ்வளவு அழிவுகளை சந்தித்ததுமாகும்.  

maithri mahintha ranil rauff hakeem sambanthan rishad_Fotor

 

இதற்கிடையில் மேற்கத்தேய நாடுகள் முன்னின்று எமது உள்நாட்டு விவகாரத்தினில் தலையிட்டு சிருபான்மயினர்களுக்கான தீர்வினை பெற்று தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. எப்பொழுதும் பூகோள சுயநல அரசியல் சார்ந்தே அவர்களது செயற்பாடுகள் அமைந்திருக்கும். மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்னும் நாட்டினை உருவாக்கியது முதல், சூடான் நாட்டிலிருந்து தென் சூடானுக்கு சுதந்திரம் வழங்கியது வரைக்குமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கத்தேய நாடுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தே அமைந்திருந்தது.

 

இன்றைய இலங்கை அரசாங்கம் முற்றிலும் மேற்கெத்தேய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதனால், இலங்கை அரசாங்கத்தினை பகைத்துக்கொண்டு இங்கு இருக்கின்ற சிறுபான்மை இனத்துக்கு உரிமையினை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் வரிந்துகட்டிக்கொண்டு முயற்சி செய்யும் தேவை அவர்களுக்கில்லை.  

 

சிலவேளை மஹிந்த ராஜபக்சவை போன்று மேற்கத்தைய தீவிர எதிர்ப்பு கொள்கையினை இந்த அரசாங்கமும் பின்பற்றுமேயானால், இலங்கை அரசாங்கத்தினை பணியவைக்கும் நோக்குடன் அல்லது பழிவாங்கும் நோக்குடன் சிறுபான்மையினர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்துக்கொண்டு, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தங்களுக்கு சாதகமாக அரசியல் நகர்வினை மேற்கொண்டு, சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையினை வழங்க முற்பட்டிருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போதில்லை.           

 

கடந்தகாலங்களில் மாறிமாறி ஆட்சி செய்து, ஒருவர்மீது மற்றவர் பழி போட்டு தப்பிக்கொண்ட  இரு பிரதான கட்சிகளும், தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றிணைந்து இன்று ஆட்சி செய்கின்றனர். சர்வதேசத்தினதும், புலம்பெயர்ந்த தமிழர்களினதும் அழுத்தங்கள் காரணமாக இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மூலமாக சிறுபான்மையினருக்கான அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் என்று நம்பப்படுகின்றது. இதற்காக பாராளுமன்றத்தில் இருக்கின்ற தென்னிலங்கை தேசியவாதிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதே கேள்வியாகும்.   

 

அதிகாரப்பரவலாக்கம் செய்வதென்றால் முதலில் அரசியல் யாப்பில் திருத்தம் செய்யபடல் வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும். இதனை எவ்வாறு இவர்களால் பெறமுடியும்? இன்று பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கமாக இருந்தாலும், அதில் ஸ்ரீ.ல.சு. கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே செல்வாக்கு செலுத்துபவராக காணப்படுகின்றார். 

 

அனைத்து அதிகாரங்களும் தன்னிடம் இருந்தபோதும், சிறுபான்மை மக்களுக்கு எதுவும் வழங்காமல் சர்வதேசத்திடம் ஒன்றையும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னொன்றினையும் கூறி காலத்தை இழுத்தடித்துச்சென்ற மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், இன்று தனிக்கட்சி ஒன்றினை அமைப்பது தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமையிலான கூட்டணியில் அதிகமானவர்கள் மகிந்தவினை ஆதரிக்கின்றனர். 

 

அத்துடன் வடக்கும், கிழக்கும் இணைந்திருந்தபோது அதனை பிரிப்பதற்கு முன்னின்ற ஜே.வீ.பி.யினரும், ஜாதிக ஹெல உறுமயவும் இன்றைய அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒருபொழுதும் இவ்விரு மாகானங்களும் மீண்டும் இணைக்கப்படுவதற்கு விரும்ப மாட்டார்கள். அதேவேளை வடகிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.  

 

இதற்கிடையில் ஐ.தே.கட்சியில் இருக்கின்ற அதிகார பகிர்வுக்கு எதிரான இனவாத சக்திகளும், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிரான சக்திகளும் எந்தவித தீர்வு திட்டத்தினையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

கடந்த சுதந்திரதின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியதற்கே பொறுத்துக்கொள்ள முடியாமல் பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இருக்கின்ற தென்னிலங்கை இனவாதிகள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன், எதிர்காலங்களில் அரபி மொழியிலும்  பாடச்சொல்லுவார்கள் என்று மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தனது மறைமுக அதிரிப்தியினை வெளியிட்டிருந்தார்.   

 

காற்றில் கலந்து சென்று சில நொடிகள் ஒலிக்கின்ற தேசிய கீதம் பாடியதற்கே இவ்வளவு விமர்சித்தவர்கள், எதிர்வரும் காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அதிகாரத்தினை பகிர்ந்து கொள்ளுவதற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது எங்களது அறியாமையாகும்.  

 

எனவே இப்படியே காலங்கள் செல்லும். இனப்பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் வழங்கப்படாமலேயே மைத்ரியும், ரணிலும் ஒய்வு பெற்று செல்வார்கள். இதுதான் கடந்தகால படிப்பினையும், நடைபெறப்போகின்ற கசப்பான உண்மையுமாகும். 

 

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது