அஸ்ரப் ஏ சமத்
சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நன்றாக ஆராயப்படாமல் அவசரப்பட்டு தேர்தல் சீர் திருத்தங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாதென்றும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை கொழும்பின் புறநகர்ப்பகுதியான பத்தரமுல்லையில் நடைபெற்ற பல கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய முக்கிய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் உத்தேச 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மைச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும், சிறிய அரசியல் கட்சிகளும் கூட்டாக நடாத்திய மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணி வரை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
நகர அபிவிருத்திஇ நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் அங்கம் வகிக்காத பல சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கு பற்றி தங்களது கட்சிகளின் சார்பில் பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் முறையே கருத்துக்களை முன் வைத்ததைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்தடுத்து அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர். இடையிடையே பரவலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
ஏற்கனவே அமைச்சரவையில் பிரஸ்தாப 20ஆவது சீர்திருத்தம் தொடர்பாக இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அவற்றில் இறுதியாகச் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் சட்டமூலத்தின் வடிவிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் அவசரப்பட்டு முடிவெடுக்குமானால், உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மையினக் கட்சிகளுக்கும்இ சிறிய கட்சிளுக்கும் ஏற்படலாம் என்றும் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்.