மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். இது தொடர்பில் மன்னார் மாவட்ட கல்விமான்களை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைத்துத் திட்டங்களை தயாரித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார், அடம்பன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,
யுத்தம் எமது மக்களின் வாழ்வை மிக மோசமாக சீரழித்திருக்கிறது. இதனால் நாம் வாழ்விடம் இழந்தோம். உடமைகளை இழந்தோம். தொழில்களை இழந்தோம். உறவுகளை இழந்தோம். யுத்தம் முடிவடைந்து மீண்டும் சமாதானம் ஏற்பட்ட போதும், கடந்த காலங்களில் நமக்கிருந்த வேதனைகள் இன்னும் அகலவில்லை. நாம் பல்வேறு கஷ்டங்களிலேயே வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
யுத்தத்தின் காரணமாக இன உறவு சீர் குலைந்து இருக்கின்றது. ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கும் நிலையே இங்கு இருக்கின்றது. இனங்களுக்கிடையிலான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழ், முஸ்லிம், சிங்கள என்ற பேதங்களை வளர்த்து நாம் இனியும் முட்டி மோதிக்கொண்டிருக்கக் கூடாது.
கடந்த காலத்தில் நாம் இழந்த கல்விச் செல்வத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும், எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மாணவர்கள் கல்வியை விட்டு ஒதுங்கக் கூடாது. மாணவர்களின் கல்வித்தாகத்துக்கு பெற்றோர்களும், ஆசியர்களும் பாரிய பங்களிப்பு நல்க வேண்டும்.
கல்வியில் உயர்வு கண்டால் நாம் சர்வதேசம் வரை புகழ் பெற முடியும். குறுகிய வட்டத்துக்குள் இருந்துகொண்டு கல்வியை மட்டுப்படுத்திக்கொண்டிருக்காமல், சர்வதேச தரத்துடன் போட்டி போடுவதற்குரிய வழியை ஏற்படுத்த வேண்டும். முயற்சியும், வைராக்கியமும் இருந்தால் இதனை இலகுவில் சாதிக்க முடியும்.
மாந்தை மேற்கு பிரதேச மக்களின் நலவாழ்வுக்காக நான் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றேன். இந்தப் பகுதியில் ஒரு ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவோம். அதன் மூலம். திறமையும், ஆற்றலும் உள்ளோருக்கு தொழில் வழங்குவோம். நாம் இளைஞர்களின் ஆற்றல்களை மேலும் விருத்தி செய்யும் நோக்கில், மாந்தைப் பிரதேசத்தில் அவர்களுக்கென 13 கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். சில நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் மூலமே இதனை செயற்படுத்த முடிந்தது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பாடசாலை அதிபர் சேவியரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன். மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயிண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஊடகப்பிரிவு