முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு நெருக்கமானவரும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னைய அதிகாரிகளில் ஒருவருமான கெப்டன் திஸ்ஸவின் பெயர் இந்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டது.
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் பொலை மற்றும் மர்ம மரணத்தைத் தழுவிய இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் கெப்டன் திஸ்ஸவுக்குத் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் உருவ ஓவியங்களை அண்மையில் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டிருந்தது.
கொலைச் சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகளின் உதவியுடன் குறித்த உருவ ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.
அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு உருவப் படம் ராஜபக்ஸவினரின் கொலைக்குழுவின் தலைவன் கெப்டன் திஸ்ஸவின் உருவத்தை ஒத்திருப்பதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் லசந்த கொலையிலும் கெப்டன் திஸ்ஸவுக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் தோன்றியுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க ராஜபக்ஸவினரின் ஆசீர்வாதத்துடன் படுகொலை செய்யப்பட்டதாகவே இதுவரை அனைத்து ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.