பொலிவேரியன் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைக்கு முதல்வரின் பிரத்தியேக ஏற்பாடு!

அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கையை பிரத்தியேகமாக முன்னெடுப்பதற்காக அப்பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு கல்முனை மாநகர சபையினால் குபேட்டா இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
20160216_152810_Fotor
பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், நிர்வாக உத்தியோகத்தார் எம்.ஐ.உதுமாலெப்பை உட்பட மாநகர சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பொலிவேரியன் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
20160216_151915_Fotor
சுமார் 600 குடும்பங்கள் வாழ்கின்ற பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற குப்பை, கூளங்களை சேகரித்து அகற்றும் பொருட்டு பிரத்தியேக ஏற்பாடு குறித்து மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்ட திட்டம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன் பிரகாரம் இங்கு சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை இப்பகுதியிலேயே ஒரு பள்ளக்காணியில் கொட்டி, அதன் மேல் மண்ணிட்டு நிரப்புவது என தீர்மானிக்கப்பட்டதுடன் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பொறிமுறை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் மாநகர சபை, பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றின் வகிபாகங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட பின்னரே குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என இங்கு மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னதாக மாநகர முதல்வர், பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்ட பகுதிக்கு விஜயம் செய்து, நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்தார்.