எனது உயர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்டவர்களே நச்சு எண்ணங்களை மக்களிடம் விதைத்து வருகின்றனர்: ரிசாத்

 

12713895_553519484814101_1339554653_n_Fotorஊடகப்பிரிவு 

 

யுத்தகாலத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை, காங்கேசெந்துரை சீமெந்துத் தொழிற்சாலை ஆகியவற்றை மீண்டும் இயங்க வைப்பதற்காக, வடமாகான சபையின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன். இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனும் நேரில் சந்தித்து பேசியுள்ளதோடு அவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கின்றேன் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை(17) தெரிவித்தார்.

12728966_553481894817860_7859613006480703060_n_Fotor

பேசாலையில் லங்கா சதொசவின் கிளையை அங்குரார்ப்பணம் செய்த பின்னர், அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் லங்கா சதொச தலைவர் ரொகான் அத்துகோரள, மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். 

12688107_553481938151189_9185988465099298422_n_Fotor

அமைச்சர் இங்கு கூறியதாவது. 

பேசாலையில் திறக்கப்பட்டுள்ள சதொச கிளை, வடக்கு, கிழக்கின் முதலாவது கிளை என்ற பெருமையைப் பெறுகின்றது. இலங்கையில் திறக்கப்படும் இரண்டாவது கிளை இதுவாகும். புதிய அரசாங்கம் வரவு, செலவுத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அங்கமாக நாம் சதொச மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். பாவனையாளர்களுக்குத் தரமான பொருட்களை வழங்குவதும், சாதாரண விலைக்கு அந்தப் பொருட்களை விற்பதும் சதொச நிறுவனத்தின் உயரிய நோக்கமாகும். உங்கள் காலடியில் எல்லாப் பொருட்களையும் கொண்டுவந்து, நீங்கள் அந்தப் பொருட்களை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, வெளியிடங்களில் நீங்கள் ஒரு கிலோகிராம் சீனியை 105 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளும் நிலையில், சதொசவில் அதனை 86  ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும்.

வடமாகாணத்தில் விவசாயத்துறையையும், மீன்பிடித்  தொழிலையும் விருத்தி செய்வதற்கு, நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். மன்னாரின் மீன்வளத்தை முறையாகப் பயன்படுத்தி, மீனவர்களுக்கு அதனை இலாபமீட்டும் தொழிலாக மாற்றுவதற்காக, பேசாலையில் மீனவர் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் மீன்களை குறைந்த விலையில் விற்று நஷ்டமடைவதை தடுப்பதற்காக, மீன்களை கருவாடாகப் பதப்படுத்தி, நல்ல விலைக்கு விற்க முடியும். அத்துடன் மன்னார் மாவட்டத்தின் காய்கறி உற்பத்திகள், நெல், பனம்பொருள் உற்பத்திகளை நல்ல விலையில் விற்பதற்காக சில நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளோம். மன்னார் மாவட்டத்தில் வருடம் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் மெட்ரிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மன்னார் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை நிறுத்துவதற்காக, கடந்த மாவாட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் நான் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அரச உயர் மட்டத்தின் கவனத்துக்கும், இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். 

12736269_553519531480763_1590833273_n_Fotor

கடந்த தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தலிலும் எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நான் ஒருபோதும் மீறமாட்டேன். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் நான் உதவி வருகின்றேன். விதவைகளுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட நான் பல்வேறு உதவிகளை இன்னும் மேற்கொள்ளவுள்ளேன். என்னிடம் இனவாதமோ, மதவாதாமோ குடிகொண்டிருக்கவில்லை. எனது உயர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்டவர்களே அத்தகைய நச்சு எண்ணங்களை உங்களிடம் விதைத்து வருகின்றனர். யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்கள், குறிப்பாக பேசாலை, வங்காலை மக்கள் இன்னும் தமிழக அகதி முகாம்களிலே கஷ்டப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் மன்னாரில் வந்து சொந்தத் தொழில் செய்து வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இறுதியாகக் கடந்த தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த பேசாலை மக்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.