தேர்தல் மறுசீரமைப்புத் திருத்தச் சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றக்கூடாது என்றும் அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் ஒரு வருடத்தின் பின்பே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டை அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் கொண்டுள்ளன.
நேற்று கூடிய இக்கட்சிகள் இதற்கான பொது இணக்கப்பாடொன்றையும் நேற்று வெளிப்படுத்தியுள்ளன.
சிறுபான்மை கட்சிகளின் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று பத்தரமுல்லை லோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பி. திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அநுர குமார திசாநாயக்க, திஸ்ஸ விதாரண, மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆனந்த சங்கரி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டதுடன் மூன்று விடயங்கள் தொடர்பில் கட்சிகள் இணக்கப்பாடு கண்டன.
தேர்தல் மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றக்கூடாது என்றும் அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் ஒரு வருட காலத்திற்கு அது அமுலுக்கு வரக்கூடாது என்றும் ஒரு வருட காலத்தின் பின்னரே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் இங்கு இணக்கப்பாடு காணப்பட்டது.
அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளில் சிறுபான் மைக் கட்சிகளின் இணக்கப்பாடு மற்றும் புதிய தேர்தல் முறையில் உள்ள விகி தாசாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடொன்றைக் காண்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
20வது சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதும் பாராளுமன்றம் கலைக்கப்படுவதும் ஒரே சமயத்தில் இடம்பெறக்கூடாது என்ற பொதுவாக இணக்கப்பாட்டையே இதன்போது சகல சிறுபான்மைக் கட்சிகளும் கொண் டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.