சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல் முறையீடு மனு மீது மே 11ல் தீர்ப்பு !

 Jayalalithaa_269092f

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தனிக்கோர்ட்டு நீதிபதி டி.குன்கா தீர்ப்பு வழங்கினார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அக்டோபர் 13-ந் தேதி விடுதலை ஆனார்கள்.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜனவரி 5-ந் தேதி தொடங்கியது. மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

நீதிபதி குமாரசாமி 45 நாட்களில் விசாரணையை முடித்து, மார்ச் 11-ந் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, தனிக்கோர்ட்டில் அரசு வக்கீலாக ஆஜரான பவானி சிங்கே, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் அரசு வக்கீலாக ஆஜரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பவானி சிங் நியமனம் சட்டப்படி செல்லாது என்றும், எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும் போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது என்றும், மாறாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துபூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஏப்ரல் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க விதிக்கப்பட்ட கால அவகாசத்தை மே 12-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.

அதன்படி அன்பழகன் 81 பக்க எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். கர்நாடக அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா 18 பக்க எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி குமாரசாமி தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். அவர் தீர்ப்பு வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய காலஅவகாசம் வருகிற செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது.

எனவே அதற்கு ஒருநாள் முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, நீதிபதி குமாரசாமி வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வழங்குகிறார்.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கர்நாடக ஐகோர்ட்டின் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் நேற்று இரவு வெளியிட்டார்.

இதனால் பெங்களூரு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, இணை கமிஷனர் ஹரிசேகரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். கர்நாடக ஐகோர்ட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே, அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முன்கூட்டியே பெங்களூரு சென்ற வண்ணம் உள்ளனர். அங்கு தங்குவதற்காக அவர்கள் விடுதிகளிலும், ஓட்டல்களிலும் அறைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.