ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது

212873.3

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நெஹி 36, தோனி (39 நாட்அவுட்) ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல், சிம்மன்ஸ் களம் இறங்கினார்கள். இருவரும் சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். நெக்ரா வீசிய 3-வது ஓவரில் பார்த்தீவ் பட்டேல் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் அவர் கொடுத்த கேட்சை நெஹி பிடிக்கத் தவறினார். இதனால் பட்டேல் 15 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். 4-வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரிலும் பட்டேல் இரண்டு பவுண்டரி அடித்தார்.

5-து ஓவரை நெக்ரா வீசினார். இந்த ஓவரில் சிம்மன்ஸ் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 6-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் சிம்மன்ஸ் ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை அணி முதல் 6 ஓவரான பவர் பிளேயில் 61 ரன்கள் குவித்தது. அப்போது பட்டேல், சிம்மன்ஸ் தலா 30 ரன்கள் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து விளையாடிய பார்த்தீவ் பட்டேல் அரை சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் அஸ்வின் வீசிய 11-வது ஓவரில் பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். இவரை தொடர்ந்து சிம்மன்சும் அதே ஓவரில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அதன்பின் அம்பதி ராயுடு களமிறங்கினார். ரோகித் சர்மா நிதனாமாக ஆட ராயுடு அதிரடியாக விளையாடினார். பின்னர் ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ராயுடுவுடன் பாண்டியா ஜோடி சேர்ந்தார்.

கடைசி 2 ஓவரில் மும்பை அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19 ஓவரை நெஹி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் பாண்டியா. அதன்பின் மூன்றவாது, நான்காவது பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். கடைசி பந்தை சந்தித்த ராயுடும் அந்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை அணி 19 ஓவரில் 25 ரன்கள் குவித்தது.

மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 2வது பந்தில் ராயுடு பவுண்டரி அடிக்க மும்பை அணி 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 34, பாண்டியா 21 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.