எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர் பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தூரமானதாகவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை நாரஹேன்பிட்ட அபயாராமவில் நடைபெற்றது. இதில் மெளலவிமார், உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இதன்போது கடந்த காலத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு சில தவறுகள் இடம்பெற்றன. தமிழ் மக்களும் சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இவற்றுக்கு நான் பொறுப்பல்ல. நான் இனவாதியல்ல. தாம் விரும்பிய மதத்தை பின்பற்றி செயற்படும் சுதந்திரத்தை நானே பெற்றுக் கொடுத்தேன். கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து கவலையடைகிறேன். இது தொடர்பில் நான் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற இடமளிக்க மாட்டேன்.
என்னை சந்திக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்கள் நேரம் ஒதுக்குமாறு கூறி வருகின்றனர். அதன்படியே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பொய்யான பிரசாரங்களுக்கு முஸ்லிம்கள் ஏமாறினார்கள். உண்மைநிலை அறிந்த பின்னர் அவர்கள் என்னை சந்திக்க வரத் தொடங்கியுள்ளனர் என்றார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், பொய் பிரசாரங்களினால் கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். நல்லாட்சி வந்த பின்னர் முதலில் முஸ்லிம் ஒருவரே பலிவாங்கப்பட்டார். மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் ஆளுநர் பதவி பறிக்கப்பட்டது. ஆரம்ப முதல் சு.க.வின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா, பேருவளை நகரசபை மேயர் மில்பர் கபூர், குருணாகல் சு.க அமைப்பாளர் அப்துல் சத்தார். கொடிகாவத்தை பிரதேச சபை உபதலைவர் நபுஹான், மாத்தளை நகர சபை மேயர் ஹில்மி கரீம், ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, இசாம் மரிக்கார் மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.