எஸ்.எம்.அறூஸ்
இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கை ரசிகர்கள் கண்டு களிப்பதற்கான வயாப்பு இல்லாமல் போய்விட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்த போதிலும் இம்முறை இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் மாத்திரம் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை.
கடந்த காலங்களில் இருந்த அமைச்சர்களை விட இம்முறை ஆளுமையுள்ள விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதியமைச்சரும் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் மிகப்பெரிய பலத்தை நிருபிக்கின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்க முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கிரிக்கட் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற போட்டிகளாகும். ஆனால் மெய்வல்லுநர் போட்டிகள் என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை,இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற போட்டிகளாகும். இவ்வாறு நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு இடம்பெறுகின்ற போட்டிகளை கட்டாயம் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி இன்றுடன் ஐந்து நாட்களாகின்றது. இலங்கையின் சார்பாக திறமை காட்டியவர்கள் யார் என்பதைக்கூட அறிய முடியாத நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சர்கூட போட்டிகள் நடைபெறும் இடத்தில் இருக்கின்றார்.
விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இலங்கை ரசிகர்கள் பலமான வேண்டுகோளை முன்வைக்கின்றனர். இன்றிலிருந்தாவது மீதமிருக்கின்ற போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள். நல்லாட்சியில் இவ்வாறு இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாகும்.