ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது !

maithri karu
புதிய சட்ட மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அரசியலமைப்பு சபையினால் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த சட்ட மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அரசியலமைப்பு சபை நேற்று (08) கூடி கலந்துரையாடியுள்ள போதிலும், சபையினால் இறுதி தீர்மானத்தை எட்ட முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அதனைத் தொடர்ந்து, அதற்கான பொறுப்பை அரசியலமைப்பு சபை ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளது. 

அடுத்த சட்ட மா அதிபராக சொலிஸ்டர் ஜெனரல்களான சுஹத கம்லத், ஜயந்த ஜயசூரிய மற்றும் கபில வைத்தியரத்ன ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார். 

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரிகளாக செயற்பட்ட இவர்களில், சட்ட மாஅதிபராக யாரை நியமிப்பது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற அரசியலமைப்பு சபை கூடி, மிக ஆழமாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மிக ஆழமாக ஆராய்ந்துள்ளனர். 

இவ்வாறு நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர், யாரை அடுத்த சட்ட மா அதிபராக நியமிப்பது என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியாத நிலைக்கு அரசியலமைப்பு சபை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதையடுத்து, அடுத்த சட்ட மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்டும் பொறுப்பை ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் அரசியலமைப்பு சபை ஒப்படைத்துள்ளது. 

யுவன் ஜன் விஜேதிலக்க சட்ட மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரை சட்ட மா அதிபரொருவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.