காமிஸ் கலீஸ்
இலங்கை நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமா’அத்தே இஸ்லாமிய்யி அமைப்பின் சேய் இயக்கமான இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்’இய்யா) மருதமுனைக் கிளையினால் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட இரத்ததான நிகழ்வு மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இன் நிகழ்வானது மாலை 4.30 வரை நடந்தேறியது.
மருதமுனையில் முதன்முறையாக இன் நிகழ்விலேயே கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளினதும் இரத்த வங்கிகளுக்காக இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி சார்பாக Dr. N. ரமேஷ் தலைமையிலான குழுவினரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி சார்பாக Dr. MS. நுஸ்ரத் பேஹம் மற்றும் Dr. MT. ஷிபாயா ஆகியோர் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.
இவ் அமைப்பினால் கடந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுவந்த இரத்த தான நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானோர் இதுவரை இரத்த தானம் செய்துள்ளனர். அவ்வாறே இம்முறையும் 130 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் அடங்கலாக 143 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். மருதமுனையைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது வெளியூர் இளைஞர்களும் இன் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.