எம்.வை.அமீர்
கடந்த 2012 ஆம் ஆண்டு கிழக்குமாகாணசபையில் ஆதாரவைத்திய சாலையாக தரமுயர்த்துவதற்கு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிந்தவூர் வைத்தியசாலை சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளில் சாய்ந்தமருது வைத்தியசாலை மட்டும் தரமுயர்த்தப்படாமல் இருப்பதாகவும் அதனை தான் அவசரமாக தரமுயர்த்தித் தரவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
“ஒரே நாடு பெரும் சக்தி” எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வும், புனர் நிர்மாணம் செய்யப்பட வெளி நோயாளர் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று(04) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஏ.எல்.ஆப்டீனது நேறிப்படுத்தலுடனும் செயலாளர் எம்.றியாத் ஏ.மஜீத்தின் வழிநடத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நஸீர், தான் அமைச்சராக பதவியேற்றது முதல் இன மத பிரதேச வேறுபாடில்லாது சகல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து தனது அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களினதும் குறைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தித்து வருவதாகவும் அந்த வரிசையில் சாய்ந்தமருது வைத்தியசாலையில் காணப்படும் குறைகளை நிவர்த்திக்க உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது வைத்தியசாலையை அவசரமாக தரமுயர்த்துகின்ற அதேவேளை இவ்வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை விஸ்தரிப்பதற்காக ஐந்து மில்லியன் ரூபாயையும் பழுதடைந்துள்ள மின்சார ஜெனரேட்டர் இணைப்பைத் திருத்துவதற்கான ஆறு லட்சம் ரூபாயையும் வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா இங்கு கருத்துத் தெரிவித்தபோது சாய்ந்தமருது மக்களின் பிரதான கோரிக்கைகளில் உள்ளுராட்சி மன்றம் அதற்க்கு அடுத்ததாக இவ்வைத்தியசாலையை தரமுயர்த்தும் விடயம் எனவும் மத்தியில் அமைச்சரவை அமைச்சர் மாகாணத்தில் முதலமைச்சரும் சுகாதார அமைச்சர் மத்தியில் சுகாதார பிரதி அமைச்சரும் விளையாடுத்துறை பிரதி அமைச்சையும் வைத்துக்கொண்டு அதி உச்சமாக வாக்களிக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றால் அவ்வாறானவர்கள் விடயத்தில் எதிர்காலத்தில் யோசிக்க முற்படுவர் என்றும் தெரிவித்தார்.
கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தனது உரையில் அமைச்சருடன் இணைந்து இவ்வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான செயற்பாடுகளில் இறங்குவதாகவும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் தங்களது உரைகளில் வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கான அனைத்து செயற்பாடுகளுக்கும் தங்களால் ஆனா சகல முயற்சிகளையும் எடுப்பதாக தெரிவித்தனர்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தனது உரையில் இவ்வைத்தியசாலை மூன்று சுனாமிகளை சந்தித்துள்ளதாகவும் அவ்வாறன சுனாமிகள் எவ்வாறு ஏற்பட்டன அவைகள் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பனபோன்ற விடயங்களை விளக்கமாக எடுத்துக்கூறினார்.
நிகழ்வில் அமைச்சருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் அபிவிருத்திச்சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.