முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் ஆசை பகல் கனவாக மாறியுள்ளது. மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு தனது 70 வயதில் அரசியல் செய்வதனை விடுத்து வீட்டில் இருந்து நன்மையான காரியங்கள் செய்து புண்ணியம் தேட வேண்டுமென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டு சேர்வதாக இருந்தால் புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நேற்று முன் தினம் இடம்பெற்ற சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆசை நிறைவேறவில்லை. மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னூதாரணமாக செயற்பட்டுள்ளார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவதாரம் மீளவும் உருவெடுத்துள்ளது. இந்த அவதாரம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பெரும் தடையாக உள்ளது. அரசியலமைப்பின் 19 அவது திருத்தச்சட்டம் நிறைவேற்றுவதற்கும் இந்த அவதார கும்பல் பெரும் தடையாக இருந்தது.
இலங்கை வரலாற்றில் இதுவரை காலங்களும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு மூவின மக்களும் ஒன்று சேர்ந்தனர். வடக்கு ,கிழக்கில் 80 வீதத்திற்கு மேற்பட்ட வாக்கு பதிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வந்தடைந்தது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக வருவதற்காக தனது உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறார். தனது முழுமையான மோசடிகள் நாட்டு மக்களுக்கு வெளிவந்து விடுமோ என்ற அச்சத்திலேயே அவர் பிரதமராக கனவு காண்கிறார். இதன்படியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பினை நடத்தினார்.
எனினும் அந்த பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடையவில்லை. இதன்படி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு பகல் கனவாக மாறியுள்ளது. அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிஙகவே பிரதமர் கதிரையில் அமர்வார் .
மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கூட்டு சேர்வதாக இருந்தால் புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் சாத்தியமில்லை.
ஆகவே முன்னாள் ஜனாதிபதி வீண் காரியங்களை ஈடுபட கூடாது. மக்களினால் நிராகரிக்கப்பட்டவர் பிரதமராக விரும்புவது வெட்கப்படவேண்டிய விடயமாகும். எனவே மஹிந்த ராஜபக்ஷ மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு தனது 70 வயதில் அரசியல் செய்வதனை முற்றாக நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து நன்மையான காரியங்கள் செய்து புண்ணியம் தேட வேண்டும் என்றார்.