அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த முறையில் சர்வதேச உறணாவை பேணிவருகின்றார். இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் வருகை தந்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் சில பிரச்சினை இருக்கலாம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இந்த அனைத்து நாடுகளும் எமது ஜனாதிபதியையும் நாட்டையும் ஒரே விதமான முறையில் நேசிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்றார்.