நாட்டில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,வில்பத்து தேசிய வனப்பகுதியில் முஸ்லிம்களோ அல்லது பாகிஸ்தான் பிரஜைகளோ குடியேற்றப்படவில்லை. இதனை நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் சவால் விடுத்தார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அண்மைக்காலமாக சில சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பிழையான செய்திகளை பரப்பி வருகின்றன.
வில்பத்து தேசிய வனப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம் மக்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளும் குடியேற்றப்படுவதாக எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன.அதனோடு என்னையும் தொடர்புபடுத்தியுள்ளன.
1990 களில் பிரபாகரனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புத்தளம் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.நாடு பிரிவதை எதிர்த்ததினாலேயே முஸ்லிம்களுக்கு இந்நிலை ஏற்பட்டது.
கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் தமது சொந்தக்காணிகளில் மீள் குடியேறும் போதே வில்பத்து காடு அழிக்கப்படுவதாக இனவாதிகள் பிரசாரம் செய்கின்றனர்.
முஸ்லிம்கள் வாழ்ந்த சில கிராமங்களில் இன்று வேறு மக்கள் குடியேறியுள்ளனர்.அதேபோன்று சில காணிகள் படையினரின் தேவைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாறானதோர் நிலையில் அம்மக்கள் வாழ்வதற்கும் காணிகளையே கேட்கின்றனர். காட்டை அழிக்கவில்லை.
ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தாலும் இன்று 30000 க்கு உட்பட்ட குடும்பங்களே வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு சென்றுள்ளனர்.எமது மக்கள் தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் வாழ்வதற்கான உரிமையையே கேட்கின்றனர்.இதேபோல் தமிழ் – சிங்கள மக்களுக்கும் மீளக்குடியேறும் உரிமையுள்ளது.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் குர்ஆனுக்கு எதிராகவும்,முஸ்லிம்களின் உணவு உடை உட்பட அவர்களது கலாசாரத்துக்கு எதிராக நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டி விட்ட சக்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
முஸ்லிம் – தமிழ் என சிறுபான்மை மக்கள் இணைந்து அமோகமாக வாக்குகளை வழங்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள்.
அதனோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மைத்திரி – ரணில் நல்லாட்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை இனவாத சக்திகள் நாட்டுக்குள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாதத்தை தூண்டி விடும் சதித்திட்டத்தை முன்னெடுக்கின்றது.
இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியை கவிழ்ப்பதே இச்சதிகாரர்களின் திட்டமாகும்.
இதற்காக வில்பத்து தேசிய வனம் அழிக்கப்படுவதாகவும் முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்படுவதாகவும் சில ஊடகங்களின் துணையுடன் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விடுகின்றனர்.
எனவே வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நான் கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். வில்பத்து காடு ஒரு அங்குலமேனும் அழிக்கப்படவும் இல்லை. முஸ்லிம்கள் குடியேற்றப்படவும் இல்லை.
அவ்வாறு எவராவது குடியேற்றப்பட்டதை நிரூபித்து காட்டினால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால் விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.