நாட்டில் மீண்டும் இனலாதத்தைத் தூண்டும் சக்திகள் பரவலாகத் தலைதூக்க ஆரம்பித்திருப்பது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா,
அண்மையில் சிங்ஹலே எனும் அமைப்பினர், சகோதர முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனெல்லைப் பகுதியில் அம் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
அதே நேரம், யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் இனந்தெரியாத சக்திகளால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலான சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் புத்த விஹாரை அமைக்கும்படிக் கோரி இச் சுவரொட்டிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் காணப்படுவதால், இதன் உள் நோக்கம் இனங்களிடையே குழப்ப நிலையைத் தூண்டுவதே என்பது தெளிவாகின்றது.
மாறாக, புத்த விஹாரை அமைக்கும் உள் நோக்கத்துடன் இச் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கருத முடிகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் இனியும் தொடரக்கூடாது என்பதற்காகவே நாம், இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து, தண்டனைகள் வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம்.
எனவே, அரசாங்கம் இதனை அவதானத்தில் எடுத்து உடனடி செயற்பாடுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளதென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.