ஏ.எல்.எம். நபார்டீன், அபு அலா
அம்பாறை மாவட்ட கரும்புக் காணி உரிமையாளர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிய இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்துடன் உண்ணாவிரதமும் எதிர்வரும் சனிக்கிழமை (30) ஹிங்குரான நகரத்தில் இடம்பெறவுள்ளதாக ஆலங்குளம் விவசாயிகள் அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் இன்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த மாதம் 10 ஆம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திய பின்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் இதுதொடர்பிலா எழுத்து மூல மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தும் இதுவரை காலமும் இப்பிரச்சினை தீர்க்கப்படமால் உள்ளதை அடுத்தே இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் எதிர்வரும் சனிக்கிழமை (30) ஹிங்குரான நகரத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அம்பாறை மாவட்ட ஒன்றிணைந்த விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பு எனும் பெயரில் ஆலங்குளம், தீகவாவி, நுரைச்சோலை, நீத்தை, இறக்காமம், கல்முனை, கல்மடுவ போன்ற பிரதேசங்களிலுள்ள 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.