நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக அந்த மாற்றத்தை சீர்குலைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போதைக்கு தேர்தலை நடத்தாது தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததென கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் குறிப்பிட்டார்.அரசியல் கட்சிகளின் போட்டியில் நாட்டை சீரழித்துவிட வேண்டாம். நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.உடனடியாக தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கம் கலைக்கப்படுவது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை தேசிய அரசாங்கத்தின் மூலமாகவே வீழ்த்தினோம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதால் தான் அதிகாரப் பகிர்வு, சுயாதீன சேவைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட ஜனநாயக வேலைத்திட்டங்களை செய்ய முடிந்துள்ளது. அவ்வாறானதொரு நிலையில் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சிறந்த வழிமுறையாகும்.
இப்போது ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றதை உடனடியாக சீர்குலைத்து மீண்டும் நாட்டை பாதாளத்தில் தள்ளுவதற்காக ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கான பாதையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது. கடந்த காலத்தில் சர்வாதிகார பாதையில் மஹிந்த அரசாங்கம் பயணித்ததை மக்கள் நன்கு உணர்ந்ததன் காரணத்தினால் தான் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்.அதேபோல் தேசிய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கும் என்ற காரணத்தினால் தான் மக்கள் தேசிய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.
இவ்வாறானதொரு நிலைமையில் இப்போது தேசிய அரசாங்கத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தேவை இல்லை. எனவே தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லதொரு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பிலும் குழப்பகரமான நிலைமைகள் உள்ளன. இந் நிலையில் உடனடியாக தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்துவதில் சாத்தியமில்லை. எனவே சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி தேர்தலை நடத்தவேண்டும். அரசியல் போட்டியில் ஆட்சியை தக்கவைப்பதற்காக நாட்டை மீண்டும் சீரழித்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.