பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 10 மில்லியன் ரூபாவை வழங்குவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இடைக்கால வரவு–செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவித்தார். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. நிதியமைச்சர் அறிவித்த 10 மில்லியன் ரூபா எங்கே? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த கேள்வியெழுப்பினார்.
வீட்டுக்குள்ளேயே திருடர்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் திருடர்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதாக கூறினார்கள். ஆனால் என்ன நடந்தது? இதுதான் நல்லாட்சி போன்று தெரிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிடுகை யில்,
மேதினக் கூட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நாங்கள் சிறிய மைதானம் ஒன்றில் கூட்டத்தை நடத்தியதாக சிலர் கூறியுள்ளனர். ஆனால் நாங்கள் முதலில் கெம்பல் பார்க் மைதானத்தை கேட்டிருந்தோம். ஆனால் கொழும்பு மாநகர சபை அதனை ஐக்கிய தேசிய கட்சிக்கு கொடுத்துவிட்டது. அதனை நல்லாட்சியின் ஒரு அங்கமாக இருக்கும் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு அதிக மக்கள் கலந்துகொண்டார் கள் என்றும் அதன்மூலம் பலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மார்தட்டிக்கொள்கின் றனர். ஆனால் மேதினக் கூட்டத்துக்கு வருகின்ற மக்களை வைத்து கட்சிக்கான ஆதரவை கணிப்பிட முடியும் என்றால் அது வெறுமனே மாயையாகும்.
ஜனாதிபதி திட்டவட்டம்
சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் மக்கள் மட்டுமே தன்னை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூற்றாகும். இதன்மூலம் ஜனாதிபதி சிறந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சிலர் ஜனாதிபதியை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கு ஜனாதிபதி சிறந்த பதிலை வழங்கியுள்ளார். அது மட்டுமன்றி சர்வதேசம் எந்தவகையிலும் இலங்கையின் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். .
அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இது முக்கியமான விடயமாகும். அத்துடன் இலங்கைக்கு உதவி செய்யத் தயார் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலர் கூறியுள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையையும் அவர் பாராட்டியுள்ளார். இது ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தை வெளிக்காட்டுகின்றது.
பொய்கார அரசாங்கம்
தற்போதைய அரசாங்கம் பொய்கார அரசாங்கமாக மாறியுள்ளது. அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 10 மில்லியன் ரூபாவை வழங்குவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவித்தார். தற்போது 2015 ஆம் ஆண்டின் மே மாதமும் வந்துவிட்டது. ஆனால் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்படவில்லை.
ஏன் இந்த அரசாங்கம் இவ்வாறு பொய்கூறவேண்டும். நாட்டில் பாரிய அளவிலான மற்றும் சிறியளவிலான அபிவிருத்தி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 100 இலட்சம் ரூபாவை வழங்குவதாக கூறி இந்த அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. பொய்களை கூறவேண்டாம் என்று அரசாங்கத்துக்கு கூறுகின்றோம். தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வேலை செய்கின்றார்? நாங்கள் மேற்கொண்ட திட்டங்களுக்கு தமது பெயர்களை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்கின்றோம்.
அரச வங்கிகளில் என்ன நடக்கின்றது என்று நாங்கள் அறிந்துகொண்டுள்ளோம். அவை தொடர்பில் விரைவில் அறிவிப்போம். அத்துடன் தனியார் வங்கிகளின் பணிப்பாளர் சபைக்கு அரசு சார்பில் ஒருவர் இடம்பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்க முக்கியஸ்தர்கள் தமக்குத் தேவையானவர்களை நியமிப்பதை காணமுடிகின்றது. மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்பட்டுள்ளது. அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றது. ஆனால் வீட்டுக்குள்ளேயே திருடர்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் திருடர்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றது.
ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன் றத்தை கலைப்பதாக கூறினார்கள். ஆனால் என்ன நடந்தது? ச.தொ.ச.வை விற்றவர்கள் இன்று அமைச்சர்களாகியுள்ளனர். இதுதான் நல்லாட்சி என்றும் கூறுகின்றனர் என்றார்.