க்றிஸ் கைல் சதமடிக்க பஞ்சாபை வென்றது பெங்களூர் !

Pepsi IPL 2015 - M40 RCB v KXIP

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையான. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் களமிறங்கியது.

துவக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், விராட் கோலி களமிறங்கி பஞ்சாப் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். குறிப்பாக கிறிஸ் கெயில் ஆட்டத்தில் அனல் பறந்தது. விறுவிறுப்பாக ஆடிய கெயில், 22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் விரைவில் அரை சதம் அடித்தார். 

அணியின் ஸ்கோர் 119 ஆக இருக்கும்போது, விராட் கோலி (32) தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் இணைய ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. புயல் வேக பேட்டிங்கை தொடர்ந்த கெயில், சதம் கடந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் டிவில்லியர்சும் வெளுத்து வாங்கினார். 15-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார்.

இந்நிலையில், 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசிய கெயில், அக்சர் பட்டேல் வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தை அடிக்க முற்பட்டு அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 190.

கிறிஸ் கெயில் ரன்மழை ஓய்ந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிவில்லியர்சுடன் இளம் வீரர் சர்பராஸ் கான் களமிறங்க, பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 47 ரன்களுடனும், சர்பராஸ் கான் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விஜய், வோரா வந்த வேகத்திலேயே தலா 2 ரன் எடுத்து நடையை கட்டினர். பின்னர் வந்த சில நிமிடங்களிலேயே சாகா (13), மேக்ஸ்வெல் (1), மில்லர் (7), கேப்டன் பெய்லே (2), பெவிலியன் திரும்பினர். இவர்கள் 4 பேரையும் பந்து வீச்சாளர் அரவிந்த் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி போட்டியை சீக்கிரம் முடிக்கும் அளவிற்கு சென்றது. சிறப்பாக விளையாட வேண்டிய பேட்ஸ்மென்கள் அனைவரும் வெளியேற, என்ன செய்வது என்று அறியாமல் வந்த பந்து வீச்சாளர்கள் அணியின் ஸ்கோரை 100 ரன்களாவது தொட பாடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் எதிர்கொண்ட ஸ்டார்க்கின் பந்துகள் பேட்டில் படாமல் ஸ்டம்பிளே பட்டது.

இதனால் 13.4 ஓவர்களில் 88 ரன்னில் மேட்சை முடிவுக்கு கொண்டு வந்தது பஞ்சாப் அணி. இந்த மோசமான நிலையிலும், அக்சார் பட்டேல் மட்டும் அவுட்டாகாமல் அடித்த 40 ரன்கள் அணியின் ஸ்கோர் 88 ரன்களாவது உயர உதவியது.

பஞ்சாப் அணி வீரர்களை வந்த வேகத்திலேயே திரும்ப உதவிய, பெங்களூர் பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் அரவிந்த் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.