பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நலன் கருதி துவ்வையாற்றை புனரமைக்கும் பணியை அம்பாறை மாவட்ட மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என மகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள்…
றியாஸ் ஆதம்
பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நலன்கருதி பொத்துவில் பிரதேசத்தில் மத்திய நீர்ப்பாசன காரியாலயத்தினால் நிருவகிக்கப்பட்டு வரும் துவ்வையாறு நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலும், துப்பரவு செய்யப்படாமலும் இருப்பதனாலும் இவ்வாற்றில் மரங்கள் விழுந்து கிடப்பதால் அணைக்கட்டு உடைவதுடன், பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரினால் பொத்துவில் பிரதேச விவசாயிகளின் காணிகள் பாதிக்கப்படுவதுடன், பசறிச்சேனை, உல்லே, சர்வோதய புறம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் வெள்ளத்தினால் வருடாவருடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இப்பிரதேச மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சினால் 02 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு துவ்வையாற்றின் பகுதி 01 வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து துவ்வையாற்றில் வரும் வெள்ள நீரின் ஒரு பகுதியினை அருகம்பே ஆற்றின் ஊடாக கடலுக்கு செல்லுவதற்கும், இன்னும் ஒரு பகுதியை குடாக்களி முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லக் கூடிய வகையிலும், துவ்வையாற்றில் நீண்ட காலமாக விழுந்து கிடந்த மரங்களையும் அப்புறப்படுத்தி துவ்வையாற்றை துப்பரவு செய்து பகுதி ஒன்றினை நிறைவு செய்துள்ளோம்.
துவ்வையாற்றின் பகுதி 02க்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதனால் பொத்துவில் பிரதேச விவசாயிகளின் விவசாயக் காணிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன், பல கிராமங்கள் மழை காலத்தில் நீரினால் மூழ்கின்றது. எனவே, அவசரமாக இந்த வருட அபிவிருத்தி திட்டத்தில் பொத்துவில் துவ்வையாறு ஆற்றின் அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய நீர்ப்பாசன திணைக்களம் முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.நிஹால் சிறிவர்த்தன பொத்துவில் துவ்வையாறு அணைக் கட்டை நிர்மாணிப்பதற்கு பெருந் தொகை நிதி தேவைப்படுகின்றன. துவ்வையாற்றின் பகுதி 01க்காக கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சு 02 மில்லியன் நிதி வழங்கி அவ்வேலைத்திட்டத்தினை நிறைவு செய்தோம். இந்த வருடம் துவ்வையாற்றை சுத்தப்படுத்தும் பகுதி 02ன் வேலைத் திட்டத்திற்கு எமது திணைக்களம் முன்னுரிமை வழங்கி செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.