முதலமைச்சரின் ஊடகப் பிரிவு
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஒரே நாளில் ஒரே இடத்தில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், மாவட்ட அரசாங்க அதிபர், சகல திணைக்களங்கள், சகல திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள் அனைவரையும் அழைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் நடாத்தவிருக்கும் மாபெரும் நடமாடும் சேவை எதிர்வரும் 14.05.2015 வியாழக் கிழமை இடம்பெற உள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் உத்தவின் பெயரில் இடம்பெறும் இவ்வொரு நாள் நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் மக்களின் சகல பிரச்சனைகளுக்கும் முடிந்தளவு அன்றே உடனடித் தீர்வினைப் பெற்றுக்கொடுப்படும் என்று கிழக்கு மாகாணசபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நடமாடும் சேவை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணி, விவசாயம், மீன்பிடி, கால்நடை, வேலைவாய்ப்பு, பாதைகள், வடிகான்கள், கட்டிடங்கள்,சமுர்த்தி, பட்டதாரிகள், முதியோர், சிறுவர், மாணவர்கள், ஆசிரியர்கள், மாதர் சங்கங்கள், கிராமிய சங்கங்கள் இன்னும் இன்னும் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக இந்த நடமாடும் சேவை இடம்பெற இருக்கிறது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதிகளாக: கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியபதி கலபதி, கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் தண்டாயுத பாணி, விவசாய கால்நடைகள் அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஷ கலபதி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சாள்ஸ், மற்றும்பொலிஸ்மா அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள், என்று பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.