நாளை பிரித்தானியாவில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்!

 பல புதிய அரசியல் சக்திகள் வலுப்பெற்றுள்ள நிலையில் எக்கட்சி வெற்றியீட்டும் என்பது குறித்தும் அதிக இடங்களைப் பெறும் கட்சியின் தலைவர் பிரதமராவாரா என்பது குறித்தும் சந்தேகங்கள் இருக்கின்றன.

உலக நடாளுமன்றங்களின் தாய் என அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம்
பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிடம்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் தேர்தல்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான போட்டியாகவே இருந்துள்ளன. 

மத்திய வலதுசாரிக் கட்சியான கன்சர்வேட்டி கட்சியோ அல்லது மத்திய இடதுசாரிக் கட்சியான தொழிற் கட்சியோ தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும். லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி மூன்றாவது கட்சியாக தொடர்ந்து வரும்.

கூட்டணி

ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இது முற்றிலும் மாறிப் போனது. மொத்தமுள்ள 650 இடங்களில்- ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களில் யாரும் வெற்றி பெறாத சூழலில் கன்சர்வேட்டிவ் கட்சியும்-லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தன.

லிபரல் டேமக்ரடட்டிக் கட்சியின் துணையோடு ஆட்சி அமைத்தார் கேமரன்
பிரதமரின் டவுனிங் தெரு இல்லத்துக்கு முன்பாக டேவிட் கேமரூன் மற்றும் நிக் கிளேக் 

ஐரோப்பாவில் பல நாடுகளில் கூட்டணி அரசுகள் சகஜம் என்றாலும், பிரிட்டனில் கூட்டணி அரசு என்பது பல தசாப்தங்களில் இல்லாத ஒரு புதுமை. 

வருமான வரி வரம்பை உயர்த்துவோம் என்ற லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் உறுதிமொழி நிறைவேற்றப்பட்டாலும், பல்கலைக்கழக கட்டணத்தை ஒழிப்போம் என்ற அவர்களின் உறுதி மொழிக்கு மாறாக – கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது.

இப்போது தேர்தல் பிரசாரத்தில் மும்மரமாக ஈடுபடும் துணைப் பிரதமரும் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக், மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் கல்விக்கும், சகாதாரத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கூட்டணி அமைத்தாலும் இதில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எஸ் என் பி

பிரிட்டனின் வடக்கேயுள்ள ஸ்காட்லாந்தில் மேலெழுந்துவரும் தேசியவாதமும் இந்தத் தேர்தலில் முக்கிய காரணியாக இருக்கும். பிரிட்டனின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து இருந்தாலும் அந்தப் பகுதிக்கு அதிக அளவு அதிகாரங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து தேசியக் கட்சியான எஸ் என் பி, ஸ்காட்லாந்துக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கோருகிறது.

எஸ் என் பியின் தலைவர் நிக்கோலா ஸாட்ர்ஜன்
எஸ் என் பியின் தலைவர் நிக்கோலா ஸாட்ர்ஜன் 

ஸ்காட்லாந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்தரியும் வாக்கெடுப்பில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் பிரிட்டனில் நீடிப்பது என்ற முடிவு எட்டப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்தில் இதுவரை ஆளுமை செலுத்தும் மூன்று கட்சிகளும் ஸ்காட்லாந்துப் பிரிவினையை எதிர்த்தன. ஆனால் 59 இடங்களைக் கொண்ட ஸ்காட்லாந்தில் எஸ் என் பியின் செல்வாக்கு கணிசாமாக உயர்ந்துள்ளது.

இடதுசாரி பார்வை கொண்ட எஸ் என் பி 49 இடங்களை வெல்லலாம் என்று சில கணிப்புகள் காட்டுகின்றன. லேபர் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எஸ் என் பி அக்கட்சியை ஆதரிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். எட் மிலிபாண்டோ ஸ்காட்லாந்து பிரிவினையை, அணு ஆயுதங்களை வைத்திருப்பது போன்ற விடயங்களில் எஸ் என் பியின் கொள்கைகளை, ஆதரிக்க மாட்டேன் என்று கூறிவருகிறார். உழைக்கும் வர்கத்தினரை கவரும் வகையில் அவரது தேர்தல் பிரசாரம் அமைந்துள்ளது.

லேபர் கட்சின் செல்வாக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்துள்ளது
லேபர் கட்சின் செல்வாக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்துள்ளது

தற்போதைய நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியோ அல்லது லேபர் கட்சியோதான் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக உருவாகும் நிலை உள்ளது. ஆனால் இருவரில் ஒருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கணிப்புகள் காட்டுகின்றன. 

பெரும்பான்மைக்கு சற்று குறைவாக அதே நேரம் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றும் கட்சி, சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம்.

 வலது சாரிக் கொள்கைகளை முன்னேடுக்கும் யுனைட்ட் கிங்டம் இண்டிபெண்டன்ட் பார்டி சில தொகுதிகளில் அதிக வாக்குக்களை பெறலாம் என்றாலும் இது இரட்டை இலக்க இடங்களை வெல்லாது என்றே நம்பப்படுகிறது. குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் போன்ற அதிரடியான கோரிக்கைகளை இந்தக் கட்சி முன்வைக்கிறது. 

( நன்றி பி பி சி )