கொழும்பில் பயிற்சி – சம்பளம் 10ஆயிரம் திண்டாடும் வட கிழக்கு பட்டதாரிகள் !

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை கொழும்பில் பட்டதாரிப் பயிலுனர்களாக பயிற்சியில் ஈடுபடுவதற்கான கடிதங்கள் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. இதன்படி அரசசேவையில் 3500 பட்டதாரிகள் பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
convocation-cap
 
இவர்களில் வடகிழக்கை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பட்டதாரிகளும் அடங்குகின்றனர். யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரையான பகுதிகளில் வசிக்கும் குறித்த பட்டதாரிகள் பத்தாயிரம் ரூபா சம்பளத்துடன் எவ்வாறு கொழும்பில் பயிலுனர்களாக பணியாற்றுவது என்று திண்டாடுகின்றனர். 
 
2012ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டிய வேலை 2016ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் தாமதமாக கிடைத்துள்ள நிலையில் குறைந்தபட்சம் தமக்கான பணியை வடகிழக்கில் உள்ள மாவட்டங்களில் வழங்கியிருக்கலாம் என்றும் தமது ஆதங்கத்தை பட்டதாரிப் பயிலுனர்கள் தெரிவிக்கின்றனர். 
 
தற்போதைய வாழ்வுச் செலவுச் சூழலில் பத்தாயிரம் ரூபாவுடன் எவ்வாறு காலத்தை கழிப்பது என்றும் இவ்வாறான நிலமையில் குழந்தைகளுடன் கொழும்பில் தங்கியிருந்து தமது பணியை மேற்கொள்ள எந்தவிதமான சூழ்நிலையும் இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
இதேவேளை இன்றைய தினம் தமக்கு பணி ஒதுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சென்ற பட்டதாரிகள் தம்மை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவட்டங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு நிரப்பி பணிக்கு ஈடுபடுத்துமாறும் கோரி வருகின்றனர். 
 
இதேவேளை தாம் எதிர்நோக்கியிருக்கும் இந்தப் பிரச்சினை குறித்து அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகள் உரிய தரப்புடன் பேசி தமக்கு தீர்வொன்றை பெற்றுத் தருமாறும் பட்டதாரிப் பயிலுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.