இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு தேசிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில்அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவராயின், புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மஹிந்தவின் ஆதரவு முக்கியமான இருப்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், நாட்டின் எதிர்க்காலத்தை கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்புக்கு அவர் ஆதரவு வழங்குவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
தனி நாட்டுக்கான எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்றும், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.