காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் கள விஜயம் ஒன்றினை NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று மேற்கொண்டார். NFGG யின் காத்தான்குடி பிரதேச சூறா சபையின் உறுப்பினரான ASM ஹில்மி அவர்களும் இக்கள விஜயத்தில் பங்கெடுத்திருந்தார்.
இன்று காலை 09.00 மணியளவில் அப்பகுதிக்குச் சென்ற பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அப்பிரதேச மீனவர்களின் முக்கிய தேவைகளைக் கேட்டறிந்து அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களுக்கான உடனடித் தீர்வுகளையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததோடு அதற்கான நடவடிக்கைகளை இன்றே ஆரம்பித்திருக்கின்றார்.
மேலும், கடந்த நகரசபை நிர்வாகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அழிவுற்ற நிலையில் காணப்படும் மிதப்புப் பாதையின் நிலையையும் பார்வையிட்டதுடன் பொது மக்களின் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து கொண்டார். காத்தான்குடி பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து பெருந்தொகை நிதி செலவு செய்யப்பட்டு திருகோணமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த மிதப்புப் பாதை ஆற்றுவழியான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மேலதிக தொகை செலவு செய்யப்பட்டு மிதக்கும் உணவகமாக காத்தான்குடி முன்னாள் நகர சபை நிர்வாகத்தினால் பெரும் பரபரப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்று இம்மிதக்கும் பாதை அழிவுற்ற நிலையில் இம்மதப்பு பாதையானது இப்போது ஆற்றங்கரையில் ஒதுங்கிக் கிடப்பதையும் இதற்காக செலவு செய்யப்பட்ட பணம் பொறுப்பற்ற முறையில் வீணடிக்கப்பட்டிருப்பதையும் இப்பிரதேச மக்கள் கவலையுடன் NFGG பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினர்.