நிந்தவூர் பிரதேச சபை : இறைச்சிக்கடை குத்தகையில் தனிநபர் ஆதிக்கம், மக்கள் அவதி !

12506597_1079391378760286_516687881_n_Fotor

சுலைமான் றாபி 

நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2016ம் ஆண்டிற்கான இறைச்சிக்கடை குத்தகையில் தனிநபர் ஆதிக்கம் நிலவி வருவதனால் அன்றாடம் இறைச்சிகளை கொள்வனவு செய்கின்ற பொது மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வருகின்றனர். 

2016ம் ஆண்டிற்காக நிந்தவூர் பிரதேச சபையினரால் 05 இறைச்சிக்கடைகளுக்காக கேள்விகள் கோரப்பட்டு அது கேள்வி கோரலின் அடிப்படையில் தனி நபர் ஒருவரினால் மொத்தமாக 05 கடைகளும் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் இந்த 05 கடைகளில் நிந்தவூர் மீராநகர் வீதியில் அமைந்துள்ள இறைச்சிக்கடையானது ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரைக்கும் திறக்கப்படாமல் இருப்பதோடு  ஏனைய 4 கடைகளும் திறக்கப்பட்டு விற்பனைகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகின்றது. 

இதனால் இப்பகுதியில் உள்ள பொது மக்கள் தூர இடங்களுக்குச் சென்று இறைச்சிக் கொள்வனவிற்காக அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. விசேடமாக பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதோடு அன்றாடம் பல்வேறு வகையான அவதிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். 
இதேவேளை கடந்த காலங்களில் இப்பகுதியில் காணப்பட்ட இறைச்சிக் கடையால் தங்கள் கணவன்மார்கள் தொழிலுக்காக வெளியில் சென்றால் வீட்டிலுள்ள பெண்களும், விதவைகளும், மூதாட்டிகளும் இக்கடைக்குச் சென்றே  தங்களுக்குத்தேவையான இறைச்சிகளை கொள்வனவு செய்திருந்தனர். 

இது இவ்வாறு இருக்க 2016ம் ஆண்டில் குத்தகைக்காக இறைச்சிக் கடைகளை கொள்வனவு செய்துள்ள குறித்த கொள்வனவாளர் நிந்தவூர் மீராநகர் பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக் கடையில் போதியளவு விற்பனை நடைபெறாமையினால் தனது ஆதிக்கத்தின் படி குறித்த கடையினை மூடியுள்ளார். 

மேலும் கடந்த பிரதேச சபையின் ஆட்சிக்காலத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் சபை அமர்வின் போது  இந்த குத்தகை முறை சம்பந்தமாக தனது எதிர்ப்பினை தெரிவித்ததோடு, அன்றிருந்த ஆட்சிக்காலத்தில் இவைகள் புறந்தள்ளப்பட்டமையினால் தொடர்ச்சியாக தனிநபர் மொத்த இறைச்சிக் கடைகளை கொள்வனவு செய்யும் நிலைமைகளே நிந்தவூர் பிரதேச சபையில் நீடித்து வருகின்றது. 

இதேவேளை இவ்விடயம் சம்பந்தமாக  நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எம். ஜௌபரினை தொடர்பு கொண்டு கேட்ட போது : 

இவ்வருடத்திற்கு நிந்தவூர் பிரதேச சபையினால் மீராநகர் வீதி இறைச்சிக்கடை உட்பட மொத்தமாக 05 இறைச்சிக்கடைக்கான கேள்விகல் கோரப்பட்டு, கேள்வி கோரலின் அடிப்படையில் தனிநபர் ஒருவர் 05 கடைகளையும் கொள்வனவு செய்திருந்தார். மேலும் குறிப்பிட்ட மீராநகர் வீதியில் அமைந்துள்ள இறைச்சிக்கடை இயங்காத விடயம் சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள்  தனக்கு இன்று (11) மகஜர் ஒன்றினை கையளித்துள்ளதோடு, இவ்விடயம் சம்பந்தமாக குறித்த இறைச்சிக்கடை குத்தகைக்காரரினை அழைத்து பேசுவதாகவும், இந்த கடையினை தொடர்ந்தும் நடாத்திச் செல்லுவதில் அவரிற்கு தடைகள் இருக்குமானால் தற்காலிகமாக வேறொருவரைக் கொண்டு மீராநகர் பிரதேச இறைச்சிக் கடையினை இயங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

எனவே எதிர்வரும் காலங்களில் நிந்தவூர் பிரதேச சபையானது இவ்வாறான இறைச்சிக் கடை குத்தகைகளை தனிஒரு நபரின் ஆழுகைக்குச் செல்ல விடாது பரந்த அளவில் கேள்வி மனு அடிப்படையில் இறைச்சிக் கடைகளினை குத்தகைக்கு விடவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். 

(படங்களில் காண்பது :  மூடப்பட்டுள்ள நிலையில் உள்ள மீராநகர் வீதி இறைச்சிக் கடையினையும், இன்றைய தினம் (11) மக்களால் கையளிக்கப்பட்ட மகஜரினையும்)

12528029_1079391402093617_2047259681_n_Fotor
New Doc 21_1_Fotor
New Doc 19_1_Fotor
New Doc 20_1_Fotor