ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையிலான பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், தங்களது சிக்கல் சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் உலக நாடுகளின் முயற்சியை பாதிக்காது என்று இருநாடுகளும் கூட்டாக தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் இம்மாதம்(ஜனவரி) 25-ம் தேதி சிரியாவில் போரை நிறுத்துவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற சிரியாவின் அண்டை நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியில் தற்போது ஐ.நா., இறங்கியுள்ளது.
சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் தூதர் ஸ்டாபன் டி மிஸ்துரா, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவத் ஜரிப்பை தெக்ரானில் சந்தித்து பேசினார். இது குறித்து மிஸ்துரா கூறுகையில், சிரியா தொடர்பாக இம்மாத இறுதியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு தங்களது பிரச்சனை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஈரான் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
நேற்று நடைபெற்ற அரபு லீக் கூட்டத்தில் கலந்து கொண்ட சவுதி அரேபியா வெளியுறவுத் துறை மந்திரி அதெல் அல்-ஜுபியர், இந்த அரசியல் சிக்கல் அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
ஷியா பிரிவு மதகுரு உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையே பிரச்சனை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும், லட்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி வருவதாகவும் ஐ.நா நாடுகள் ஏற்கனவே கூறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.