புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது எனவும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஊடகமொன்று அரசாங்கத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
புதிய அரசியல் சாசனம் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்காக உருவாக்கப்பட உள்ளதாகவும், வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும், அவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படும் எந்தவிதமான திருத்தங்களும் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் எவ்வித விடயங்களும் உத்தேச புதிய அரசியல் சாசனத்தில் கிடையாது என குறிப்பிடப்படுகிறது.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை பாராளுமன்றில் ஆற்றவுள்ளார்.
பாராளுமன்றினை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றும் யோசனை நாளை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனத்திற்கு மூன்றில் இரண்டு ஆதரவினைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.