சவுதி அரேபியா தலைமையிலான 34 நாடுகளின் கூட்டுப்படை அமைக்கும் முயற்சியை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இதேபோல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையில் இணைந்து சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது.
தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட சவுதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட 34 நாடுகளின் படைகளை இணைத்து புதிய கூட்டுப்படையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் இளவரசரும் ராணுவ மந்திரியுமான முகமது பின் சல்மான் கடந்த மாதம் அறிவித்தார்.
இந்த புதிய கூட்டுப்படையில் மாலி, மலேசியா, பாகிஸ்தான், லெபனான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் சேருவதாக முகமது பின் சல்மான் தெரிவித்திருந்த நிலையில் இப்படி ஒரு கூட்டுப்படை உருவாக்கப்படும் விஷயமே தனக்கு தெரியாது என பாகிஸ்தான் பின்வாங்கியது.
இந்நிலையில், சவுதி அரேபியா தலைமையில் 34 நாடுகளை உள்ளடக்கிய முட்டாள்களின் கூட்டுப்படையை தாக்கி அழிப்போம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் சபதம் ஏற்றுள்ளனர்.
முன்னதாக, இதைப்போல் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்படுவது தொடர்பாக தங்கள் நாட்டுக்கு எவ்வித தகவலும் இல்லை என கருத்து வெளியிட்டிருந்த பாகிஸ்தான் அரசு, தற்போது இந்த கூட்டுப்படைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்டெல் பின் அஹமஹ் அல்-ஜுபைர் நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் வந்திருந்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் மற்றும் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் சவுதி தலைமையிலான 34 நாடுகளின் கூட்டுப்படை அமைக்கும் முயற்சியை வரவேற்பதாக நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை ஒழிக்கும் விவகாரத்தில் பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவிலான அனைத்துவித முன்னெடுப்புகளையும் பாகிஸ்தான் ஆதரிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஈரானுக்கும் சவுதிக்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பனிப்போர் தொடர்பாக நவாஸ் ஷெரிப்புக்கு அப்டெல் பின் அஹமஹ் அல்-ஜுபைர் விளக்கி கூறியதாகவும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சவுதி தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கவலை அளிப்பதாக அவரிடம் தெரிவித்த நவாஸ் ஷெரிப், இஸ்லாமியர்களின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு தனக்களுக்கிடையிலான வேற்றுமைகளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.