மலையக மக்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் புதிய தேர்தல் முறை பாதிப்பாகவே அமையும் – திகாம்பரம் !

 Thigambaram-Palani

புதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பாக அமையும். ஆனால், பல்தொகுதி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமானால் சிறுபான்மை கட்சிகளுக்கு சாதகமாக அமையுமென்று தோட்ட உட்கட்ட மைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

1948ஆம் ஆண்டு மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். 1994ஆம் ஆண்டு நான்கு உறுப்பினர்கள் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றார்கள். 

ஆகவே, தொடர்ச்சியாக எமது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தற்போது 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

ஆனால், இவ்விதம் தொடர்ச்சியாக மலையக பிரதிநிதித்துவம் அதிகரித்து வந்துள்ள நிலையில் புதிய தேர்தல் முறை மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துவதால் இந்த முறை எமக்கு பாதகமாகவே நோக்க வேண்டியுள்ளது.

மலையக மக்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் புதிய தேர்தல் முறை பாதிப்பாகவே அமையும். குறிப்பாக நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் மூன்று இலட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 

இங்கிருந்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால், நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறே வலப்பனை, ஹங்குராங்கெத்த போன்ற பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். 

ஆகவே, இந்தப் பிரதேசங்களில் பல்தொகுதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவரும், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவர்.

மாற்றமாக தொகுதி வாரி தேர்தல் முறையின் மூலம் தேர்தல் நடத்தப்படு மானால் அது சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியையே ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.