திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை போன்றதே மைத்திரி,மஹிந்தவை சந்திப்பதாகும்.
இவ்வாறானதோர் சந்திப்பை நாம் எதிர்க்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹிந்த அணியின் ஆதரவாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இந்த சந்திப்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் சந்திப்பது தொடர்பாக நாம் எவ்விதமான எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
ஜனாதிபதி மைத்திரி ஒரு புறம் ஐ.தே. கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றார். மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது திருமணமான ஒருவர் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதற்கு ஒப்பானதாகும். இதனை நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கின்றோம்.
உண்மையிலேயே மஹிந்தவை சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்தும் நோக்கம் ஜனாதிபதிக்கு இருக்குமானால் ஐ.தே.கட்சியுடன் இருக்கும் உறவை உதறித்தள்ளி விட்டு அந்த அரசாங்கத்தை கலைக்க வேண்டும்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சுக்களை நடத்தினால் அதனை வரவேற்போம்.
வெறுமனே இரண்டு தோணிகளில் கால் வைத்துக்கொண்டு தீர்க்கமான முடிவெடுக்காது இச் சந்திப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.