“மைத்திரி – ரணில் ஆட்சி தமிழர் கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாம் அவசர கதியில் மாற்றங்க ளைத் திணித்து, மீண்டும் மஹிந்த தலையெடுக்க இடம் கொடுக்க விரும்பவில்லை” ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி தேசிய செயலாளரும் பி.ஜே.பியின் தமிழக முன்னாள் தலைவருமான இல. கணேசனுடனான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. பி.ஜே.பி. தமிழக துணைத் தலைவர் சக்கரவர்த்தியும் இதில் கலந்து கொண்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அதன் உப செயலாளர் சண். குகவரதன் பிரசார செயலாளர் குருசாமி, ஊடகச் செயலாளர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் வாழும் 32 இலட்சம் தமிழர்களையும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும். இலங்கை தீவில், தமிழர்களுடன் 18 இலட்சம் முங்லிம்களும், 150 இலட்சம் சிங்களவர்களும், பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றார்கள். இலங்கையில் வடக்குக்கும், தெற்கிற்கு தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், வட-கிழக்கு, இந்திய வம்சாவளி, மலையக தமிழர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் நமது கட்சி எப்போதும் உறவு பாலமாக செயலாற்றுகின்றது.
கடந்த மன்மோகன் சிங் அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கை இந்திய தேசிய நலனுக்கும், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனுக்கும், இலங்கை – இந்திய நீண்டகால நட்புறவு கோட்பாடுகளுக்கும் அப்பால் சென்று சில தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது.
இன்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளையில் இந்தியாவிலும் புதிய அரசு ஆட்சியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதேவேளை இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியில் இலங்கை தொடர்பாக நீங்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதும் எமக்கு இரட்டிப்பு மகழ்ச்சியை தருகிறது. இது சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு அல்ல. இது நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி அரசு என்ற செய்தியும், இரண்டு ஆட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடும் இன்று இலங்கையில் அனைத்து தரப்பினராலும் புரிந்துகொள்ளப்பட்ட விடயங்கள் என்பதை உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்றைய இலங்கை அரசு கடந்த கால மஹிந்த அரசுடன் பிரதான இரண்டு அடிப்படைகளில் வேறுபடுகிறது. ஒன்று கடந்தகால தமிழர் எதிர்ப்பு அரச பயங்கரவாத நிலைப்பாடு இன்று இல்லை.
இரண்டாவது, அரசு மட்ட இந்திய எதிர்ப்பு இன்று இல்லை. ஆகவே நாட்டில் மைத்திரி – ரணில் ஆட்சி தமிழர்களின் மத்தியில் கடந்த காலங்களை ஒப்பிடும் போது ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாம் அவசர கதியில் மாற்றங்களை திணித்து மீண்டும் மஹிந்த தலையெடுக்க இடம்கொடுக்க விரும்பவில்லை.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் சொல்லொணா போர்க்கால துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களின் தேசிய அரசியல் அபிலாஷை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்க பாரத அரசு துணையிருக்க வேண்டும்.
அதேபோல் இலங்கையில் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இருக்கின்ற ஐந்து பிரதான மாகாணங்களில் இந்நாட்டு தமிழர் சனத்தொகையில் சரி பாதியினர் வாழ்கின்றார்கள். குறிப்பாக மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களாக கல்வி, சுகாதார, வீடமைப்பு ஆகிய துறைகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அதேபோல் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந் தவர்களும், வடக்கு, கிழக்கில் இருந்து குடிபெயர்ந்தவர்களும், கடந்த காலங்களில் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் இருந்து நேரடியாக குடிபெயர்ந்தவர்களுமான தமிழர்கள் வந்து குடியேறி கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் நிலைகொண்டு வாழ்கிறார்கள்.
இத்தகைய அனைத்து தமிழர்களையும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரத ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும்.