முன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐ.தே.க. எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.ம.சு.மு.வில் இணைந்த இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தார். தேர்தலை தொடர்ந்து கூடிய ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியில் இருந்து நீக்கத் தீர்மானிகப்பட்டது.
தனது கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு வழங்குமாறு கோரி திஸ்ஸ அத்தநாயக்க தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க அடங்கலாக மூவரடங்கிய நீதியரசர் குழு முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது. இது தொடர்பில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஐ.தே.க.வின் முடிவு சட்டத்திற்கு முரணானது என அறிவித்தது.
தமது தரப்பு நியாயத்தை முன்வைக்க அவகாசம் வழங்காமலும் ஒழுக்காற்று விசாரணை நடத்தாமலும் அத்தநாயக்கவின் உறுப்புரிமையை ரத்து செய்ய ஐ.தே.க. எடுத்த முடிவு நியாயமற்றது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கில் ஐ.தே.க. முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் அலி சப்ரி, கெளசல்ய மொல்லிகொட, ருவன் குரே ஆகியோர் ஆஜரான அதேவேளை ஐ.தே.க. சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணிகளான சுகத் சல்தேரா, எராஜ் சில்வா ஆகியோர் ஆஜரா னார்கள்.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் ரொனால்ட் பெரேரா சுரேன் பெர்னாண்டோ ஆகியோரும் ஐ.தே.க. செயலாளர் சார்பில் இக்ரம் மொஹமட், சாதி வதூத் ஆகியோரும் ஆஜராகியிருந்தார்கள்.