எந்தவொரு பிரஜையும் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் யோசனை முன்வைக்க முடியும் !

உத்தேச அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் யோசனை முன்வைக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

vijayathasa

அந்த வகையில் உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பில் பௌத்த மாநாயக்க தேரர்கள் மற்றும் மதங்களின் தலைவர்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களின் யோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தனியான குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு இதுவரை காணப்பட்ட உரிமைகள் மறுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டு அடிப்படையற்ற பொய் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும் அரசியல் அமைப்பு இது வரையிலும் உருவாக்கப்படவில்லை என தெரிவித்த அவர் அதற்கு இன்னமும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். 

எனினும் எதிர்க்கட்சிகள் நினைக்கும் கருத்துக்களைக் கூறி மக்களை பீதியில் ஆழ்த்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

இதேவேளை அரசியல் அமைப்பு உருவாக்குதவற்கு முன்னரும் அதன் பின்னரும் கருத்துக்கள் கோரப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். 

முன்னதாக மக்களின் கருத்துக்கு அமைய சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், அதன் பின்னர் நாட்டில் மக்களின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு இதுவாகவே அமையும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தனியொரு தரப்பின் தேவைகளுக்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது என்பதனால் எந்தவொரு தரப்பும் பாதிக்கப்பட மாட்டார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.