விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சராக கடமையாற்றி வந்த திலக் மாரப்பன அண்மையில் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அரசியல் அமைப்பு மாற்றங்கள் தொடர்பிலான முக்கிய அமைச்சுப் பதவியொன்று திலக் மாரப்பனவிற்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
காலி மற்றும் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
இதேவேளை, நான்கு முக்கிய அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமது அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதற்கு நிகரான வலுவான அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென அமைச்சுப் பதவியில் மாற்றம் ஏற்படக் கூடுமென ஊகிக்கப்படும் அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதனை சில தரப்பினர் எதிர்த்து வருவதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.