ஜவ்பர்கான்
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று(1.1.2016)வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ள மீலாத் விழாவுக்காக வழங்கப்பட்ட மண்டப அனுமதியை ரத்துச் செய்யுமாறு கோரி இன்று ஜும் ஆத்தொழுகையின் பின்னர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னாள் காத்தான்குடி பிரதான வீதியில் நடைபெற்றது.
காத்தான்குடி சுன்னத் வல்ஜமாஅத் சபை எனும் அமைப்பினால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மீலாதுன் நபி விழாவொன்றை இன்று மாலை நடாத்தவுள்ளனர். இதில் இலங்கை இந்திய உலமாக்கள் உரையாற்றவுள்ளதுடன் சமயப்பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த மீலாத் விழாவை பகிஸ்கரிப்பதாகவும் இந்த மீலாத் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்தியை வெளியிடுவதாகவும் இந்த மீலாத் விழாவுக்கு வழங்கப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தின் அனுமதியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து சிலர் சுலோகங்களை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக் காரர்கள் சிலர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றினை காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரனிடம் கையளித்தனர்.
ஸ்த்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் அங்கிகாரமில்லாமல் நடைபெறும் இந்த மீலாத் விழாவை நாம் கண்டிக்கின்றோம் என்றும் இந்த விழாவுக்கு வழங்கப்பட்ட மண்டப அனுமதியை ரத்துச் செய்ய வேண்டுமென நாம் கோருவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மகஜரை கையளித்த தாருள் அதர் அத்தவியா ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் மௌலவி அஸ்பர் பதுர்தீன் தெரிவித்தார்.
இதே நேரம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள காத்தான்குடி சுன்னத் வல்ஜமாஅத் சபை எனும் அமைப்பின் முக்கியஸ்தர் எம்.ஹாலித் என்பவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இரண்டு மாதங்களளுக்கு முன்பே இந்த விழாவை நடாத்துவதற்கான மண்டப அனுமதியை காத்தான்குடி நகர சபையிடமிருந்து பெற்றுள்ளோம்.
இது ஒரு கழியாட்ட விழா அல்ல இது மீலாதுன் நபி விழாவாகும். அவர்களுக்கு சந்தி சந்தியாக மேடை போட்டு அவர்களின் கொள்கையை சொல்வதற்கும் இதே ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அவர்களின் கொள்கை பேசுவதற்கும் உரிமை இருக்குமானால் ஏன் எமக்கு மீலாத் விழா நடாத்த முடியாது. ஏன் எமது கொள்ளையை சொல்ல முடியாது. இந்த நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு எனவும் கூறினார்