தமிழர் பிரச்சினைகள் நல்லாட்சி அரசில் தீரும் என்பது உறுதி : கூட்டமைப்பு நம்பிக்கை !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் நல்லாட்சி அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.  

மலரும் இந்தப் புதிய வருடத்தின் ஆரம்பத்திலேயே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

பல நம்பிக்கைகளுடன் மலரும் இந்தப் புத்தாண்டு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர். 

இதன்போதே அவர்கள் மேற்படி விடயங்களைத் தெரிவித்தனர். 

tna

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

“தேசிய இனப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள ஒரு தீர்வை அடைய இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்றவேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

தேசிய இனப்பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை அடைதல், மக்களுக்குப் பயன்தரக்கூடிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல், நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்டல் போன்ற இமாலய பணிகளை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், 

இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார். 

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை எம்.பி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

“யாழ்.வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த தமிழ் மக்களின் மேலும் 700 ஏக்கர் காணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இது பிறக்கும் இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. 

இதேபோல இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழ் மக்களின் ஏனைய 4,000 ஏக்கர் காணிகளையும் மலரும் இந்தப் புத்தாண்டின் விடுவிப்பதாக அரசு அறிவிக்கவேண்டும். 

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பொங்கல் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். 

எனவே, அன்றைய தினம் ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். 

அதேவேளை, இலங்கையின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளையும் அரசு விடுவிக்கவேண்டும். புத்தாண்டுச் செய்தியாக இதனை நாம் விடுவிக்கின்றோம். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் மலரும் இந்தப் புத்தாண்டில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இனப்பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தப் புத்தாண்டின் ஆரம்பத்தில் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார். 

இந்தத் தீர்மானத்தின் ஊடாக உருவாகவுள்ள புதிய அரசமைப்பில் தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் புத்தாண்டை வரவேற்கின்றோம். 

பல வருடங்களாகக் கண்ணீரும் கம்பலையுமாக வாழும் எமது மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திகள் இந்தப் புத்தாண்டில் கிடைக்க வேண்டும். 

தமிழ் மக்களின் பெரும் ஆதரவினால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த நல்லாட்சி அரசு ஆட்சிப்பீடத்தில் ஏறியது.

 எனவே, நல்லாட்சி அரசு இதனை மறக்காமல் எமது மக்களுக்கு மலரும் இந்தப் புத்தாண்டில் இனப்பிரச்சினை உட்படப் பல பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம்” – என்றார். 

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி 

யாழ்ப்பாணம், வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்கென அரசால் விடுவிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என்றும், 

இதேபோலவே மலரும் இந்தப் புதிய வருடத்தில் ஆரம்பத்திலேயே சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.