சம்மாந்துறை, மத்தியமுகாம் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யக் கோரி மாகாண சபையில் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் உரை!

எம்.எம்.ஜபீர்
சம்மாந்துறை வைத்தியசாலையிலுள்ள மகப்பேற்று விடுதி சம்மாந்துறையின் சனத்தொகை 5 ஆயிரமாக இருக்கும் போது உருவாக்கப்பட்டது. தற்போது 75ஆயிரமாக சனத்தொகை உயர்வடைந்துள்ள போதிலும் எந்த விதமான மாற்றமுமின்றி அதே விடுதிதான் இப்போதும் காணப்படுகின்றது. வைத்திய வசதிகள் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் கிழக்கு மாகாண சபையில் அண்மையில் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
11145188_1503323253317121_4054637174759112464_n
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,  அடுத்த ஆண்டில் சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்தி செய்வது காட்டாய தேவையாகவுள்ளது அதிலும் குறிப்பாக மகேப்பேற்று விடுதி, சத்திர சிகிச்சை கூடம் என்பனவற்றில் பழுதடைந்த மின்குமிழ் மாற்றப்படாமல் டோச் லைட் பயன்படுத்தி சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் காணப்படுகின்றது ஆகேவே சுகாதார அமைச்சர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் மிகவும் துடிப்புள்ள சேவை செய்யக் கூடியவராகவுள்ளதனால் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுள்ளது.
சம்மாந்துறை தாதியர் விடுதிக்காக ஓதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாய் பணத்தை கல்முனையிலுள்ள ஒரு வைத்தியருக்கு வாகனம் வாங்குவதற்கு ஓதுக்கீடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் என்னிடம் வந்து முறைப்பாடு செய்கின்றனர். இதன் உண்மைத் தன்மையினை கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கையை சுகாதார அமைச்சர் மேற்கொள்ள வேண்டும். சம்மாந்துறை வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளுக்கும் இடையில் சரியான உறவுகள் காணப்படாமலுள்ளது. மத்திய அரசாங்கத்தின் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிப்பால ஹேரத் ஆகியோர்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு வந்திருந்த போது நானும் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் இதுவரைக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்குரிய நவடிக்கைகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்வதாக பொது மக்கள் என்னிடம் கூறுகின்றனர். ஆகவே உரிய நவடிக்கைகளை மேற்கொண்டு அமைச்சுக்கு தேவையான தகவல்களை செய்து கொடுப்பதற்கு நவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள மத்தியமுகாம் வைத்தியசாலையில் தற்போது 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நன்மையடைந்து வருகின்றனர். மூவின மக்களும் பயன்படுத்தும் வைத்தியசாலையாக காணப்படுவதினால் 1952 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்ற திட்டத்தில் உருவாக்கப்பட்ட வைத்தியசாலை தற்போதும் அதே நிலையில் தான் காணப்படுகின்றது. ஆனால் அந்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரூபாய் பணம் அரைவாசியாக குறைக்கப்பட்டதும் சம்மாந்துறை தாதியர் விடுதிக்கு ஓதுக்கப்பட்ட 5மில்லியன் ரூபாய் பணம் 3.7 மில்லியான குறைக்கப்பட்டதும் துரதிஸ்டவசமானது.
மத்தியமுகாம் வைத்தியசாலையை பொறுத்த வரையில் நாளாந்தம் 200 தொடக்கம் 300 பொதுமக்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அந்த வைத்தியசாலையில் நோயாளிக்குரிய மருந்து தட்டுப்பாடாகவுள்ளது. இதனால் அப்பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் தனியார் கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரத்தம், சிறுநீர் போன்றவற்றை பரிசோதிப்பதற்குரிய ஆய்வுகூட வசதிகள் இல்லாமல் காணப்படுகின்றது. ஆகவே சனத்தொகை பெருக்கத்தற்கு ஏற்ப மத்தியமுகாம் வைத்தியசாலையையும் சகல வசதிகளுடன் தரமுயர்த்த வேண்டிய தேவையாகவுள்ளது. அதனையும் தரமுயர்த்தி தருமாறு கௌரவ அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.