பாடசாலைகளில் ஊடகக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் : பிரதி அமைச்சர் ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்

adcaja

பாடசாலை மட்டத்தில் ஊடகக் கல்வியை அறிமுகப்படுத்தி அதனை கற்பிப்பதற்கு ஊடக ஆசிரியர்களையும் நியமிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் 20 வருடாந்த மாநாடும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பும் நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நேற்று (25) வெள்ளிக்கிழமை சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய ரீ-சேட்டினை நிகழ்வின் பிரதம அதிதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி வெளியீட்டு வைத்து உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

harees

பெரியோர் முதல் பாடசாலை மாணவர்கள் வரை இன்று சமூக வளைத்தளங்கள் ஆட்கொண்டுள்ளது. உலகின் எப்பகுதியில் என்ன சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதனை உடனுக்குடன் சமூக வளைத்தளங்களுக்கு கொண்டு வருகின்றனர். அந்தளவுக்கு ஊடகத்துறைக்குள் சமூக வளைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

சமூக வளைத்தளங்களில் பாடசாலை மாணவர்களும், இளைஞர்களும் அதிகமாக எழுதுகின்றனர். இதில் எழுதும் இவர்கள் ஊடக அறிவின்றி எழுதுகின்றனர். இவர்களை ஊடக தர்மத்துடன் வசன நடையில் பிழையின்றி சரியான முறையில் எழுதுபவதற்கு பாடசாலை மட்டத்தில் ஊடகக் கல்வியை ஒரு பாடமாக கற்பிப்பதற்கும் இப்பாடநெறியை கற்பிப்பதற்கு ஊடக ஆசிரியர்களை நியமிக்கவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முயற்சிக்கவுள்ளேன். இதன் மூலம் ஊடகவியலாளர்கள் தங்களுக்கான அரச தொழில்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

அரசியலில் என்னை முன்கொண்டு வந்து பிரகாசிக்க வைத்தவர்கள் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களாகும். இம்மாவட்ட மக்களின் இடர்களை வெளியுலகிற்கும் அரசியல்வாதிகளான எங்களது கவனத்திற்கும் கொண்டு வருவதில் இவர்களின் சேவைகள் அளப்பெரியதாகும். இவர்களின் எழுத்துத்திறன், தொழில்நுட்ப பாவனையுனான ஊடக முறைமை என்பனவற்றை பாராட்டுகின்றேன். அத்துடன் இன்று கௌரவிக்கப்படும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களையும் வாழ்த்துகின்றேன்.

adcaja

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் ஊடகத்துறை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் செயற்படுகின்றது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அதிகமாக தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு தேவையாகவுள்ளது.

நாட்டின் அரசியல் அமைப்பு மாற்றம், தேர்தல் முறைமை மாற்றம் என பல சம்பவங்கள் இடம்பெறவுள்ளது. இதில் தமிழ், முஸ்லிம் சமூகம் பாதிக்காத வகையில் சிறுபான்மை கட்சிகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதனை சமூக மயப்படுத்த ஊடகவியலாளர் பரந்தளவில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.