அபு அலா
அட்டாளைச்சேனை 3 ஆம் பிரிவு ரீ.பி.ஜாயா வித்தியாலய வீதி அபிவிருத்தி தொடர்பாக அப்பிரதேச மக்களிடத்தில் ஏற்பட்ட பிரச்சினையை கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (25) தலையிட்டு குறித்த வீதியின் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் முடிவுறாத ஒரு வேலைத்திட்டமான 1 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொங்றீட் வீதியுடனான வடிகான் அமைப்பைக்கொண்ட குறித்த வீதியை, அமைக்கக்கூடாது என ஒரு தரப்பினரும், அமைக்கவேண்டும் என இன்னுமோர் மாற்றத் தரப்பினருக்குமிடையே பாரிய பிரச்சினை ஏற்பட்டது.
இதனை தீர்த்துவைக்கும் முகமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் அவ்விடத்துக்கு உடனடி விஜயத்தை மேற்கொண்டு இரு சாராரையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வரும்படி உத்தரவிட்டார்.
இதற்கமைவாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகர் ஐ.எம்.ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அஸ்லம் மற்றும் தொழில் நுட்ப அதிகாரிகளை அவ்விடத்துக்கு அழைப்பித்து இரு தரப்பினரையும் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்பத்தும் வகையில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.