மருதமுனை ஷைஹா ஷஹர்
நிந்தவூரில் நாளை மாலை(25-12-2015)நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20தாவது ஆண்டு நிறைவு மாநாட்டில் மருதமுனையைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் சாதனையாளர் விருது பெறுகின்றார்.
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 1988ஆம் ஆண்டு எழுச்சிக் குரல் பத்திரிகை ஊடாக எழுத்துத் துறைக்குள் பிரவேசித்தவர்.நாளை மறுதினம்(2015-12-27)27 வருட ஊடக சேவையை இவர் பூர்த்தி செய்கின்றார்.
1996ஆம் ஆண்டு இச்சங்கத்தில் இணைந்தவர்.இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் தற்போது செய்தியாளராக கடமையாற்றுகின்றார். 15திற்கும் மேற்பட்ட இணையத்தளங்களுக்கும் செய்தியாளராக கடமை புரிகின்றார்.
2010ஆம் ஆண்டு ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய சிறந்த ஊடகவியலாளருக்கான போட்டியில் சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்ரமணியம் செட்டியார் தேசிய விருதை வென்றவர்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை ‘மெட்ரோ நியூஸ்’ பத்திரிகையில் ‘விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் தொடர்ச்சியாக 125 வாரங்கள் கட்டுரைகளை எழுதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய சிறந்த ஊடகவியலாளருக்கான போட்டியில் 2012ஆம் ஆண்டின் சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர் மருதமுனை ஒண்லைன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியராவார்.இவர் பீர்முகம்து ஆமீனா உம்மா தம்பதியின் புதல்வராவார்.
சிறந்த ஊடக சேவைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் நழீம் எம் வதுறுதீன் கௌரவிப்பு
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நழீம் எம் வதுறுதீன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்முனைப் பிராந்திய செய்தியாளராவார்.
சிறுவயது முதல் இலங்ககை வானொலி மற்றும் பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழதி வந்தவர் பின்னர் 2000ஆம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்முனைப் பிராந்திய செய்தியாளராக நியமனம் பெற்றார்.
தினகரன் வார மஞ்சரியில் தொடர்ச்சியாக கணணி தொடர்பான பல கட்டுரைகளை எழுதி பலரின் பாராட்டைப் பெற்றவர்.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்.
இவர் சிறந்த அரச சேவைக்காக கல்முனை மாநகர முதல்வர் விருது பெற்றவர்.அகில இலங்கை சமாதான நீதவானாகிய இவர் பல சமூகசேவை அமைப்புக்களில் அங்கத்துவம் வகித்து சிறந்த பங்களிப்புச் செய்துவருகின்றார்.
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம்,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழயை மாணவராவார்.இவர் மருதமுனையைச் சேர்ந்த முகம்மது நழீம் உம்மு சல்மா தம்பதியின் கனிஷ்ட புதலவராவார்.
எம்.ஐ.எம்.வலீத் ஊடக சேவைக்கான சிறப்பு விருது பெறுகின்றார்
மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.வலீத் 1997ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நவமணி பத்திரிகையின் செய்தியாளரா இணைந்து பணியாற்றும் போது 2001ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் மருதமுனை தினகரன் விஷேட நிருபராக நியமனம் பெற்றார்.
மேலும் வீரகேசரி,தினக்குரல்.சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆரம்பகால உறுப்பினராவார்.இச்சங்கத்தில் இணைந்த பின் உப செயலாளராகவும்,நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும்.ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்போது மெட்ரோ மிரர் இணையத்தளத்தின் பணிப்பாளராகவும்.இணை ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார்.1975ஆம் ஆண்டு பிறந்த இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி,கல்முனை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார்.
இவர் 2003ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை துறைப் பட்டப்படிப்பையும்,அதே ஆண்டில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகத்துறைக்கான டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.2000ஆம் ஆண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகராக பதவி பெற்று கடமைபுரிந்தார்.
பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் இன்று வரை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான ஆசியா மன்றத்தில் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது இப்றாகீம் (சொய்ஸ் பலஸ்)செய்யது ஹலீமா தம்பதியின் புதல்வராவார்.
ஜெஸ்மி எம்.மூஸா இளம் ஊடகவியலாளருக்கான் விருது பெறுகின்றார்.
மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நவமணி-எங்கள் தேசம் ஆகிய பத்திரிகைகளினூடாக செய்தியாளராகவும் கட்டுரையாளராகவும் எழுத்துப்பணியை ஆரம்பித்தார்
பின்னர் மெட்;ரோ நியூஸ்-விடிவெள்ளி ஆகிய பத்திரிகைகளிலும் எழுதத் தொடங்கி தினகரன்-வீரகேசரி-சுடர்ஒளி-தினக்குரல் பத்திரிகைகளின் பிரதேச செய்தியாளராக இன்றுவரை கடமையாற்றுகின்றார்.
2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தினக்குரலின் கிழக்குப் பதிப்பு கல்முனையிலிருந்து வெளியிடப்பட்ட போது அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்ததுடன் ‘இஸ்லாமியக் குரல்’ என்ற பகுதியை உருவாக்கி அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டுள்;ளார்;.
இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட செய்தியாளரான இவர் அலிஷ் நியூஸ் ஊடக வலையமைப்பின் பிரதம நிருவாக முகாமைத்துவ ஆசிரியராக செயற்பட்டு வருகின்றார்
2000 ஆம் ஆண்டு முதல் தினகரன் கட்டுரையின் ‘கலை இலக்கியப் பகுதி’ யில் எழுதிவந்த இலக்கியம் சார் ஆய்வுக்கட்டுரைகளை ‘தேடலின் ஒரு பக்கம்’ என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு நூலாக்கினார். நாகம்மாள் ஒரு பார்வை-திருக்குறளின் அங்கவியல் தெளிவுரை-தமிழ் வினா விடைப் பேழை ஆகிய நூல்களை உயர்தர மற்றும் சாதாரண தர தமிழ் மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளார்;
தமிழ் விசேட துறைப் பட்டதாரியான இவர் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுவதுடன் தமிழ் முதுகலைமாணியைப் பூர்த்தி செய்து முதுகலை தத்துவமாணி ஆய்வு மாணவராக இருந்து வருகின்றார்.
கலை கலாசார பண்பாட்டு அமையத்தின் ‘2012 ஆம் ஆண்டுக்கான இலக்கிய ஆய்வு-ஊடகத்துறை மற்றும் குறுஞ்செய்திச் சேவைக்கான விருது’ மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ‘2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது’—மாண்புறும் மருதமுனையின் ‘ஊடக செயற்பாட்டாளர் விருது’ஆகிய விருதுகளைப் பெற்ற இவர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நீண்ட கால உறுப்பினராவார்
இவர் மருதமுனையைச் சேர்ந்த பன்னூலாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான எஸ்.எம். எம். மூஸா-றாஹிலா தம்பதியின் ஐந்தாவது புதல்வராவார்.